யட்டியாந்தோட்டை லேவன்ட் மக்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்க இணக்கம்!

கேகாலை – யட்டியாந்தோட்டை லேவன்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக, தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு பாதுகாப்பான இடமொன்றை வழங்க தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், களனிவெளி தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த பிரச்சினைக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில், லேவன்ட் தோட்டத்தைச் சேர்ந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 145 பேர் கடந்த சில தினங்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், மழையுடனான வானிலை குறைவடைந்ததை அடுத்து, மண்சரிவு அபாயம் காணப்பட்ட அதே லயின் குடியிருப்பிற்கு செல்லுமாறு தோட்ட நிர்வாகம், மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எனினும், மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதியில் வாழ தம்மால் முடியாது எனவும், தற்காலிக கூடாரங்களிலேயே தாம் வாழ்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோட்ட நிர்வாகம், யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தது.

மக்கள் தமது காணிகளை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்து வருவதாக கூறியே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில், குறித்த இடத்திலிருந்து வெளியேறி, தமது பழைய இடத்திற்கு செல்லும் வரை தோட்டத்தில் வேலை வழங்கப்படாது எனவும் தோட்ட நிர்வாகம் அறிவித்திருந்ததாக அந்த மக்கள் கூறியிருந்தனர்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்து, விடயங்களை இன்று மாலை ஆராய்ந்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு பின்னர் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், களனிவெளி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அநுர வீரகோனை தொடர்புக் கொண்டு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இவ்வாறு நடத்தப்பட்ட கலந்துரையாடலின் ஊடாக, இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குறித்த மக்களுக்கு பாதுகாப்பான இடமொன்றை வழங்குவதாக தோட்ட நிர்வாகம் உறுதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பான மற்றும் நீர், மின்சாரம் காணப்படும் பகுதியை வழங்குமாறு, பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், களனிவெளி தோட்ட நிறுவனத்திடம் கோரியுள்ளார்.

இந்த கோரிக்கைக்கும், நிறுவனம் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில், குறித்த மக்களுக்கு பாதுகாப்பான இடமொன்றை வழங்குவது தொடர்பில் நாளைய தினம் ஆராயப்படவுள்ளது

Related Articles

Latest Articles