கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்தவர் எனக் கூறப்படும் பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் வியா பாரத்தில் கனடாவில் தொழில் பெற்றுக்கொள்வதற்காக வத்தளை குடாஏதண்ட வீதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு பணம் வழங்கியுள்ளார். பின்னர் தொழிலை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனதாக அந்த பெண்ணால் தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணை அதிகாரிகளால் 37 வயதான பெண் கைது செய்யப்பட் டுள்ளார்.
இதுவரையில் அந்த பெண்ணுக்கு எதிராக 16 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. முறைப்பாடுகளின் பிரகாரம் அவர் மோசடி செய்த பணத்தின் தொகை 6 கோடி ரூபாவுக்கும் அதிக மென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கி உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள் மற்றும் உயர் தொழில்களில் உள்ளவர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடம் அந்த பெண் மோசடி செய்துள்ளார் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி கனேடிய தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக் கூறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி பெண் வெலிசர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
