மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உண்மையாகவும், நேர்மையாகவும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அத்துடன், சம்பள விவகாரத்தை வைத்து தொழிலாளர்களை தவறாக வழிநடத்தும் வகையில் போராட்டங்கள் திசைமாறுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது எனவும் திகாம்பரம் அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வேண்டுமென தொழிலாளர்கள் கோரவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், அரசாங்கமும்தான் அந்த கோரிக்கையை முன்வைத்தன.
எனினும், சம்பள உயர்வு இழுபறியில் உள்ளது. பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. பேச்சுவார்த்தைமூலமாக 50, 100 ரூபாவே சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. சம்பள உயர்வு பேச்சு இதே வழியில் சென்றால் தீர்வு கிட்டப்போவதில்லை. எனவே, சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமெனில் தற்போதைய முறைமை மாற வேண்டும். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும்.அதனால்தான் தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவது குறித்து நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் நாம் குரல் கொடுத்துவருகின்றோம்.
தோட்டங்களை அவர்களுக்கு குத்தகைக்கேனும் வழங்கலாம். எமது ஆட்சியின் அதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். அப்போதே தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையும் மேம்படும்.
தொழிலாளர்களின் நலன்கருதிய உண்மையான போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும். மாறாக தொழிலாளர்களை பிழையாக நடத்த முற்பட்டால் ஆதரவு வழங்கப்படமாட்டாது.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.










