பொருளாதார நெருக்கடியால் அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்க 30 வீதமான எம்.பிக்கள் உத்தேசம்?

பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளால் அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் சுமார் 30 வீதமானோர் தீர்மானித்துள்ளனர் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விருப்புவாக்கு முறைமை காரணமாக பெருமளவான பணம் செலவளித்தே அரசியல்வாதிகள் நாடாளுமன்றம் தெரிவாகின்றனர் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி பத்திரத்தை வைத்தே அந்த செலவை அவர்கள் ஈடுசெய்துவந்தனர் எனக் கூறப்படுகின்றது.

தற்போது வாகன அனுமதி பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தேர்தலுக்காக பணம் தேடுவது நெருக்கடியாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் வாகன அனுமதி பத்திரம் கிடைக்காவிட்டால் தாம் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி பத்திரத்தின் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான பண ஒதுக்கீட்டை நிதியமைச்சு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

“ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதற்கு இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை.” – என்று நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எரிபொருள் விலை உயர்வினால் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்பதையும், நிகழ்வுகளில் பங்கேற்பதையும் மட்டுப்படுத்தியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
அதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களால் அதிருப்தியடைந்துள்ள எம்.பி.க்கள் குழுவொன்றும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மொட்டு கட்சி உறுப்பினர்கள் எனக் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles