அடிவாங்கும் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்?

பையன் அடங்கவே மாட்டுறான். ஒன்னு போடு அடங்கிவிடுவான். எதையாவது பண்ணிக்கிட்டே இருக்கா. இவள என்ன பண்றதுன்னு தெரியல. வர்ற கோவத்துக்கு அப்படியே தூக்கி அடிக்கலாம் போல இருக்கு. இப்படின்னு குழந்தைகள் பண்ற தப்புக்கு பெற்றோர்கள் கோபப்படுவதை பார்த்திருக்கிறோம்.

இன்னும் சில பேர் என்னை எங்க அப்பா, அம்மா அடிச்சதுனாலதான் நான் பெரிய ஆளா வந்திருக்கிறேன்னு பெருமை பேசிறதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் காலம் மாறி போய்விட்டது.

அடித்தால் குழந்தைகள் சரியாகிவிடுமா? அப்படி நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு.

பெற்றோர், ஆசிரியர், வீட்டில் உள்ள பெரியவர் யாராக இருந்தாலும் குழந்தைகளை அடிக்க கூடாது. அடிப்பது ஒரு குற்றச் செயல்.

மனிதராக பிறந்த நமக்கு உடல் ரீதியாக யார் மூலமாவது துன்பம் வந்தால் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சட்டம் உள்ளது. அது போல குழந்தைகளுக்கும் சட்டம் உள்ளது.

நம் உடல் மேல் நமக்கு எப்படி உணர்வு இருக்கிறதோ, அதுபோல குழந்தைகளுக்கும் அதே உணர்வு உள்ளது. குழந்தைகளுக்கு பிடிக்காத முறையில் அவர்களது உடலை, மனதைக் காயப்படுத்தும் செயல் குற்றம்.

மனித உரிமைப்படி உடல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் சட்டத்தின் பாதுகாப்பை அணுக முடியும். வழக்கு தொடரவும் முடியும்.

முன்பெல்லாம் எங்கள் அப்பா, அம்மா அடித்து வளர்த்த பிறகு தான் நான் எல்லாம் முன்னேறினேன் என்று சில பேர் சொல்வதை கேட்டிருக்கிறோம். முன்பிருந்த அதே மனநிலை, உடல்நிலை, வளர்ச்சி, பக்குவம், சூழல் இன்று கிடையவே கிடையாது.

இதை அவசியம் பெரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய குழந்தைகள் ரொம்பவே சென்ஸிடிவ்வாக இருக்கிறார்கள். உடன் படிக்கும் தோழி பேசவில்லை என்று ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்மா, அப்பா எப்போதும் என்னை அடிக்கிறாங்கன்னு ஒரு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. வகுப்பில் எல்லோர் முன்னரும் ஆசிரியர் அடித்தார் என ஒரு மாணவி பள்ளி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாள்.

நாம் குழந்தைகள் நம் சொத்தாக, நம் உரிமையாகப் பார்க்கிறோம். உண்மையில், அவர்கள் நம் மூலம் வந்திருக்கிறார்கள்.

ஆனால், நம்மை போல அவர்களின் இயல்பு, சுபாவம், கனவு, ஒழுக்கம், நடவடிக்கை எல்லாம் ஒன்று போல இருக்காது. அப்படி அவர்கள் என்னைப்போலதான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியாகாது.

இது அவசர உலகம். காலம் மாறி கொண்டே போகிறது. குழந்தைகளின் மன வளர்ச்சி, மனப்போக்கில் மாற்றம் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

பொதுவாக உயிரினங்கள் தன்னை விட பலசாலியான ஓர் உயிரினத்தால் ஆபத்து வர நேர்ந்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் தன்னைத் தற்காத்து கொள்ள எதிர்க்கும். அதுபோல, குழந்தைகளும் இயற்கையாகவே 4-5 வயதில் தன்னை காயப்படுத்தும் நபரை எதிர்க்கவோ, அடிக்கவோ, தன் எதிர்ப்பினை எதாவது ஒரு முறையில் காட்டவோ செய்கிறார்கள்.

அடி என்றைக்குமே ஒன்றுமே உதவாது. இது அனைவருக்கும் பொருந்தவும் பொருந்தாது. முக்கியமாக, குழந்தைகளுக்கு வாய்ப்பே இல்லை. அடிக்க, அடிக்க குழந்தைகள் கோபக்காரர்களாக மாறுவார்கள்.

அதீத இயக்கம், கோபம், வெறுப்பு, கெட்ட செயல்கள், கெட்ட எண்ணங்கள், கெட்ட சேர்கையிலும் கெட்ட செயலிலும் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக வந்துவிடும். அந்த மனநிலைமைக்கு மாறிவிடுவார்கள்.

குழந்தையை அடித்த பிறகு எந்த ஒரு பெற்றோரும் ஆனந்தமாக இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தை தெரியாமல் தன்னைத் திருப்பி அடித்து விட்டான் என நினைத்து நிம்மதியாக இருக்க முடியுமா அது மிக கொடுமை. அடிப்பது என்பது குற்றம்.

வன்முறை என்றைக்குமே தீர்வாகாது. நல்வழிப்படுத்த அன்பும் அக்கறையும் அரவணைப்பும் புரிதலுமே மிகவும் அவசியம். எந்த காரணமோ எந்த சூழலோ பெற்றோர் குழந்தைகளை அடிப்பது சரியான முடிவாக இருக்கவே இருக்காது.

ஒரு குழந்தை ஒரு தவறை செய்தால், அந்த குழந்தையிடம் பேசாமல் இருப்பது, கொஞ்சாமல் இருப்பது என என்ன குழந்தைகளின் பலவீனத்தில் சிறிய தண்டனை வழங்கி குழந்தையை திருத்தவேண்டும்.

இப்படி செய்வியா என நன்றாக அடி அடித்துவிட்டு, ஒரு மணி நேரமோ அடுத்த நாளோ குழந்தையை தூக்கி கொஞ்சுவதில் எந்த ஒரு பயனும் இல்லைவே இல்லை. இந்த நிலை குழந்தையின் நடவடிக்கையை இன்னும் மோசமாக்கும்.

பெற்றோர்கள் புரிந்து நடந்தால் குழந்தைகள் மனநிலையிலும், உடல் நிலையிலும் ஆரோக்கியமாக வளருவார்கள்.

Related Articles

Latest Articles