” தேர்தல் நடைபெறாது என வீண் அச்சம் கொள்ள வேண்டாம். அடுத்த வருடம் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அதேபோல இது தேர்தலை இலக்காகக்கொண்ட பாதீடு அல்ல.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேர்தலை முறையாகவும், சரியாகவும் நடத்துவதற்கு 21 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் மோசடிகளை தடுப்பதற்கான சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பற்றி தற்போது கதைக்கப்படுவதால், இது ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்த பாதீடு என சிலர் விமர்சிக்கின்றனர். இது தேர்தலை இலக்கு வைத்த பாதீடு அல்ல. ஏனெனில் பாதீடு தொடர்பில் அரசுமீது மக்கள் அதிருப்தி அடையலாம். பாதீட்டை மக்கள் ஏற்காமல் இருக்கலாம். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை நோக்காகக்கொண்டே பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் தேர்தல் நடத்தப்படும். மக்கள் தமக்கு தேவையானவர்களை தெரிவுசெய்யலாம்.” – என்றார்.