எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தும் பிரதமர், ஜனாதிபதி பதவிகளுக்கு தெரிவாக முடியாமல்போன ஐந்து அரசியல் வாதிகள் விபரம்…!
இலங்கை நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தும், பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவி நிலைக்கு தெரிவாக முடியாமல்போன அரசியல்வாதிகள் பட்டியலில் ஐந்து எதிர்க்கட்சி தலைவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
( மரணம், கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை, அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களாலேயே மேற்படி ஐவராலும் அடுத்த பதவி நிலைக்கு செல்ல முடியவில்லை.)
மேலும் மூன்று முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்கள் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிப்பதால் – அரசியலில் ஈடுபடுவதால் அவர்களுக்கான வாய்ப்பு இன்னும் கை நழுவி போகவில்லை. அதனால் அவர்களை தற்போதே மேற்படி பட்டியலில் இணைத்து விடமுடியாது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் பிரதமர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். தற்போது சுதந்திரக்கட்சிக்குள் அவர் அரசியல் புரட்சி செய்துள்ளார். கட்சியின் தலைவராக ஒரு தரப்பால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா. சம்பந்தன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாலும், வயது மூப்பாலும் மேற்படி முக்கிய இரு பதவிநிலைகளுக்கு அவர் தெரிவாவதற்குரிய சாத்தியம் இல்லை.
‘அதி உயர் கதிரை’யில் அமரமுடியாமல் போன எதிர்க்கட்சி தலைவர்கள்
1. இலங்கையில் முதலாவது நாடாளுமன்ற தேர்தல் 1947 இல் நடைபெற்றது. தொகுதிவாரி முறையிலேயே அத்தேர்தல் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றது. இத்தேர்தலில் ருவான்வெல்ல தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம். பெரேரா எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டார். அவர் அமைச்சு பதவியை வகித்திருந்தாலும் பிரதமர் பதவிக்கு தெரிவாகவில்லை.
(1978 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. தொகுதிவாரி முறைக்கு பதிலாக விகிதாசார தேர்தல் முறைமையும் கொண்டுவரப்பட்டது.)
2. 1960 இல் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட சுதந்திரக்கட்சி உறுப்பினர் சி.பி.டி. சில்வாவாலும் பிரதமர் பதவிக்கு வரமுடியவில்லை.
3. 1977 ஆகஸ்ட் 4 ஆம் திகதியிலிருந்து 1983 ஒக்டோபர் 24 ஆம் திகதிவரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டார். இலங்கை அரசியல் வரலாற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொண்ட முதல் எதிர்க்கட்சி தலைவர் இவராவார். எனினும், அவரால் பிரதமர் பதவிக்கு வரமுடியவில்லை.
4.1983 நவம்பர் 08 ஆம் திகதி முதல் 1988 டிசம்பர் 20 ஆம் திகதிவரை இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக அநுர பண்டாரநாயக்க செயற்பட்டார். முன்னாள் பிரதமர்களான பண்டாரநாயக்க மற்றும் ஸ்ரீமாவோ ஆகியோரின் புதல்வர் இவர். சபாநாயகர் பதவியை வகித்தாலும் பிரதமர், ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாமல் அவரின் வாழ்வு முடிந்துவிட்டது.
5. 1994 ஆகஸ்ட் 25 முதல் 1994 ஒக்டோபர் 24 ஆம் திகதிவரை காமினி திஸாநாயக்க எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டார். அவர் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக களமிறங்கி இருந்தாலும் கொல்லப்பட்டுவிட்டார். பின்னர் அவரின் மனைவியே தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் சுதந்திரக்கட்சி வேட்பாளரான சந்திரிக்கா அம்மையாரே வெற்றிபெற்றார்.
6. 2015 ஜனவரி 20 முதல் 2015 ஜுன் 26 ஆம் திகதிவரை சுதந்திரக்கட்சி உறுப்பினரான நிமல் சிறிபாலடி சில்வா எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டார். அவர் இன்னும் பிரதமர், ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகவில்லை. (அரசியலில் உள்ளதால் வாய்ப்பு இன்னும் இல்லாமல் போகவும் இல்லை)
7. 2015 செப்டம்பர் 03 முதல் 2018 டிசம்பர் 17 ஆம் திகதிவரை எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்பந்தன் பதவி வகித்தார். இலங்கையின் 2ஆவது தமிழ் எதிர்க்கட்சி தலைவர். இவரும் பிரதமர், ஜனாதிபதி பதவியை வகிக்கவில்லை.
8. 2020 ஜனவரி 03 ஆம் திகதி முதல் இதுவரை எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச செயற்பட்டுவருகின்றார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். இம்முறையும் போட்டியிடவுள்ளார். ( மேற்படி இரு பதவிகளுக்கும் இருவதற்கு இவருக்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. வயது உட்பட பல விடயங்களை இதற்கு காரணமாக கூறலாம்.)
எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டு பிரதமர் – ஜனாதிபதி பதவிக்கு தெரிவான அரசியல் வாதிகள்.
1.பண்டாரநாயக்க – பிரதமர்
2.டட்லி சேனாநாயக்க – பிரதமர்
3.ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – பிரதமர்
4. ஜே.ஆர். ஜனவர்தன – ஜனாதிபதி
5. ரணில் விக்கிரமசிங்க – பிரதமர், ஜனாதிபதி
6.மஹிந்த ராஜபக்ச – பிரதமர், ஜனாதிபதி
டி.பி. விஜேதுங்க, சந்திரிக்கா, ரட்னசிறி விக்கிரமநாயக்க, திமு ஜயரத்ன, தினேஷ் குணவர்தன ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்காமலேயே பிரதமர் பதவிக்கு வந்தவர்கள்.
ஆர்.சனத்
raasanath@gmail.com