அதிகாரப்பகிர்வு குறித்து சிங்கள மக்களையும் தெளிவுபடுத்துக

“ அதிகாரப்பகிர்வு சம்பந்தமான உங்களுடைய நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் விபரமாக எடுத்துச் சொல்லுங்கள்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் தான் நேரில் கோரிக்கை விடுத்தார் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி யின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பில் கலந்துகொண்டு விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எங்களுடைய தமிழரசுக் கட்சியினருடன் பேச வேண்டுமென்று கோரியதன் அடிப்படையில் நீண்ட நேரமாக சுமார் இரண்டு மணித்தியாலங்கள் எங்களுடைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதிலே எங்களுடைய கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, சிரேஸ்ட உபதலைவர் சி.வீ.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் நானும் கலந்து கொண்டு தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு சம்பந்தமாக எடுத்துச் சொன்னோம்.

அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக எங்களுக்கு இருக்கிற ஏமாற்றங்கள் நாங்கள் போதாது என்று சொல்லுகிற 13 ஆம் திருத்தத்தைக் கூட இப்பொழுது இன்னமும் மோசமான நிலைக்கு கடந்த கால அரசாங்கங்கள் கொண்டு வந்து விட்டிருக்கின்றன.

கொடுத்ததையும் மீளப் பெறுகிற ஒரு சூழ்ச்சியின் காரணமாக இப்பொழுது அது மிகவும் நலிவடைந்த்தாக காணப்படுகிறது. ஆகவே 13 ஆம் திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன் என்று சொல்லுவதில் கூட இன்றைக்கு அர்த்தம் இல்லாமல் இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னோம்.

இதில் விசேடமாக வடக்கு மாகாண அவைத் தலைவராக இருக்கின்ற சீ.வீ.கே.சிவஞானம் மாகாண சபை அனுபவங்களையும் மாகாண சபை நிறுவனங்களையும் எடுத்துச் செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைமைகளையும் விபரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இவற்றுக்கெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்கும் போது தன்னுடைய நோக்கு அதாவது முதலில் கிராமம் கட்டியெழுப்பபட வேண்டும் என்றும் அதன் பிறகு நகரம் பிரதேச செயலகம், மாவட்டம், மாகாணம் கட்டியெழுப்பபட்டு அதற்கு பிறகு தான் நாடு கட்டியெழுப்பபடும் என்று தன்னுடைய கோட்பாட்டைப் பற்றி சொன்னார்.

அடிமட்டத்திலே இருக்கிற நிறுவனங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தன்னுடைய கோட்பாடு என்றும் சொல்லியிருந்தார்.
இதில் விசேசமாக நிதி பகிர்வு என்ற விடயத்தையும் சொல்லியிருந்தார். அதாவது அதிகார பகிர்வை கொடுத்துவிட்டு நிதி பகிர்வை செய்யாவிட்டால் அந்த அதிகார பகிர்விலே எந்தவித பிரயோசனமும் இருக்காது என்றும் ஆகவே அது சம்பந்தமாக தாங்கள் விசேட கவனம் எடுப்பதாகவும் சொன்னார்.

நாட்டில் வாழுகிற மக்கள் மத்தியிலே அதாவது வெவ்வேறு இனங்கள் மத்தியிலே இருக்கிற பரஸ்பர நம்பிக்கையீனம் அதை நாங்கள் சிறிது சிறிதாக இல்லாதொழிக்க வேண்டும். சேர்ந்து செயற்பட வேண்டும் என்கின்ற கருத்தையும் சொல்லியிருந்தார்.

இதில் நாங்கள் அவருக்கு சொல்லியிருக்கிற விடயம் என்னவெனில் இந்த நாடு நோக்கி அவர் சொல்லுகிற கருத்தியல்கள் நல்லவை. அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எங்களது தமிழ் மக்களின் அடையாளங்கள் பேணப்பட வேண்டும். தமிழ் மக்களது தாயகத்திலே வடக்கு கிழக்கு இணைந்ததான ஒரு அலகிலே பூரண அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் மக்களுடைய எதிர்பார்ப்பு என கூறியிருந்தோம்.

அவர் சொல்லுகிற மற்ற விடயங்கள் எல்லாம் நல்லவை. வரவேற்கத்தக்கவை. ஆனால் சில வேளைகளில் எங்களுடைய மக்கள் தூரிய நோக்கோடு எதிர்பார்க்கிற அதிகாரப் பகிர்வு பற்றி பேசாமல் அதைக்குறித்து வாக்குறுதிகளை கொடுக்காமல் வேறு விடயங்களைச் சொல்லுவது அதிகாரப் பகிர்வைப் பற்றி சொல்லுவதிலேயிருந்து தப்பியோடுகிற விடயமாக எங்களுடைய மக்கள் கருதுவார்கள் என்பதை அவருக்கு தெளிவாக நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

ஆகையினாலே மற்ற எல்லா நல்ல விடயங்களையும் பற்றி சொல்லுகிற போது அதிகாரப் பகிர்வு சம்பந்தமான அவருடைய நிலைப்பாட்டை தெட்டத் தெளிவாக எங்களுடைய மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் விபரமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறோம்.

இதற்கு அவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அவை அனைத்தும் வருமென்றும் முன்கூட்டியே இந்தவிடயங்கள் உள்ளடக்கப்பட்டு தேர்தல் அறிக்கையில் முன்கூட்டியே வருமென்றும் சொல்லலியிருக்கிறார்.
கடந்த ஐனாதிபதித் தேர்தலிலே தேர்தல் அவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சொன்ன விடயங்களை வைத்து தான் அவருக்கு நாங்கள் அதரவளிக்கும் தீர்மானங்களை எடுத்திருந்தோம்.

அதனை அவருக்கு இப்ப மீளவும் ஞாபகமூட்டினோம். அப்படி நாங்கள ஓரு தீர்மானத்தை எடுத்த பின்னர் பெரிவாரியாக வாக்களித்திருந்தார்கள்.
ஆகையினால் அவர் கொடுக்கிற வாக்குறுதி எங்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் சொல்ல வேண்டும். அதை வைத்து தான் நாங்கள் எங்கள் தீர்மானங்களை எடுப்போம் என்பதை திடமாக சொல்லி அனுப்பிருக்கிறோம்.

ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க எங்களை வந்து சந்திக்க இருக்கிறார். இதில் ஒரு விடயத்தை நான் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது ஜேவிபியினருடனான சந்திப்பு முற்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட்ட சந்திப்பாகும். அதேநேரம் சஜித் பிரேமதாசாவூடனான சந்திப்பு என்பது அதற்குப் பிறகு ஒழுங்கு செய்யப்பட்ட சந்திப்பாகும். ஆனால் இது முதல் நடக்கிறது. அது பிறகு நடக்கவுள்ளது.

இதன் போது ஆதரவு வழங்குமாறு வெளிப்படையாக சஜித் பிரேமதாசா உங்களிடம் கோரிக்கை விடுத்தாரா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்..

உங்கள் ஆதரவு வேண்டுமென்று அப்படியாக அவர் சொல்லவில்லை. ஆனால் அவர் உங்கள் வந்து சந்தித்ததும் நடத்திய பேச்சுவார்த்தைகளும் அப்படியானதாகத் தான் இருந்தது என சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

 

Related Articles

Latest Articles