“அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அனைத்துத் தரப்பினரின் உடன்பாடும் முக்கியமானது”

 

முன்மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, நாட்டின் வலுசக்தித் தேவைகள் மற்றும் பொருளாதாரத்திற்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது ஆரம்பித்துள்ள 20 மெகாவொட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவொட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

வலுசக்தி என்பது ஒரு பிரதேசத்திற்கு மாத்திரமன்றி நாட்டின் தேசிய வளம் என்றும், மின்சாரப் பிரச்சினை உள்நாட்டு மின் கட்டணத்துடன் மாத்திரமன்றி நாட்டின் உற்பத்திச் செலவு, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டங்களினால் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் உட்பட மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டின் அனைத்து வளங்களும் இந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமானது என்றும், வலுசக்தி என்பது ஒரு பிரதேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, மாறாக முழு நாட்டு மக்களினதும் உரிமை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை இழக்கச் செய்யும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு சலுகை வழங்க அரசாங்கத்தால் முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்தும்போது அனைத்து தரப்பினரும் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும், அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த நேரத்திலும் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மன்னார் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த மதத் தலைவர்கள் உட்பட மக்கள், இல்மனைட் திட்டமும் காற்றாலை திட்டமும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மக்களின் வாழ்க்கையையும் பாதிப்பதாக இதன்போது தெரிவித்தனர்.

இந்த விடயம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மதிப்பீட்டு அறிக்கையின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படாது என்பதை வலியுறுத்தினார்.

சுற்றாடல் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் உரியவாறு அமுல்படுத்தப்படாமை தொடர்பில் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவித்தனர்.

மன்னார் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அந்தக் காலகட்டத்தில், பிரச்சினைகளை ஆராய்ந்து விரைவாக தீர்வுகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு அலகு மின்சாரத்தை 0.0826 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய இருந்ததுடன் அது, இலங்கை பணத்தில் 25 ரூபாவாகும். இருப்பினும், இந்த காற்றாலை மின் திட்டத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகு விலை 0.0465 அமெரிக்க டொலர்களாகும், அதாவது இலங்கை பணத்தில் 13 ரூபாவாகும்.

ஒரு அலகு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சராசரி விலையை 13 ரூபாவாகப் பேண, அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வடக்கில் உள்ள கொக்கிளாய் பாலத்தின் புனர்நிர்மாணம் மற்றும் மன்னார் புதிய உத்தேச நீர் திட்டத்திற்கான நிதி, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினால் மன்னார் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என்றால் அது தொடர்பான அறிக்கையை தயாரிக்குமாறு காணி மீட்பு திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அதிகாரசபை, காணி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு என்பன இணைந்து வடக்கில் காணி தொடர்பான அறிக்கையை தயாரித்து முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவுள்ளது.

வட மாகாண மதத் தலைவர்கள், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles