அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடனுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்டார்.

ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளார் என வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி கூறினார்.

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடனுக்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜோ பைடனுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் ஜஸ்டின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகோ உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா உடனான உறவு வலுப்பெறும் எனவும் அமெரிக்க மக்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க நாள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Paid Ad