அமெரிக்க விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயர்

அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு பயணம் சென்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற சிறப்பை இந்தியாவுக்கும், பெண் இனத்திற்கும் தந்து பெருமை சேர்த்தவர் கல்பனா சாவ்லா. இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில், மார்ச் 17, 1962-ல் பிறந்தவர். அவரது பெற்றோர் பெயர் பனாரஸ் லால் சாவ்லா- சன்யோகி தேவி.

கல்பனா சாவ்லா விமானியாக மட்டுமின்றி, வானவூர்தி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களுக்கு பயிற்சியாளராகவும் தகுதி பெற்றார். அமெரிக்காவின் விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் ஆசிரியராகவும், அத்துறை ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய ஜீன் பியர்ரே ஹாரிசனை 1983-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற பின், நாசாவில் நடந்த பல சுற்று நேர்முகத் தேர்வில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995-ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.

கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ். 87-ல் பயணித்த ஆறு விண்வெளி வீரர்களில் கல் பனாவும் ஒருவராக, 1997-ல் ஆயத்தமானார். இரண்டு வல்லுநர்களில் ஒருவராகவும், ஒரே பெண்மணியாகவும் தனது முதல் பயண குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெற்றிகரமான முதல் விண்வெளி பயணத்தில் 10.67 மில்லியன் கிலோ மீட்டர் பயணித்தார். 252 நாட்கள் விண்வெளியில் இருந்து கொண்டு பூமியை சுற்றியுள்ளார். இதற்குமுன், இந்தியரான ராகேஷ் சர்மா 1984-ல் சோவியத் விண்கலத்தில் பயணித்திருந்தார். அதனால், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்ணாகவும் இரண்டாவது இந்தியராகவும் கல்பனாவுக்கு இந்த பயணம் பெருமை தேடித்தந்தது.

கல்பனா உட்பட 7 பேர்கொண்ட குழுவுடன் 2003-ல் பயணித்த விண்கலம், தனது 16 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடமே இருந்த நிலையில், விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியானார்கள். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசா விண்ணோட்ட பதக்கம் மற்றும் சிறப்பு சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கியது.

இந்நிலையில் அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ‘ நார்த்ரோப் க்ரம்மன் ” வர்த்தகரீதியிலான விண்கலத்துக்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் இது. இதற்கு ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காக கல்பனா சால்வா பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறுகையில், விண்வெளி வீரராக சாதனை படைத்த கல்பனா சாவ்லாவை நாங்கள் மதிக்கிறோம். விண்வெளி பயணத்தில் அவரது பங்களிப்பு தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது தியாகம் மற்ற வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. எங்களது என்ஜி -14 சிக்னஸ் விண்கலத்துக்கு அவரது பெயரை சூட்டுவதில் பெருமிதம் அடைகிறோம் என்று தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா விண்கலம், வரும் 29ம் திகதி நாசாவின் மிட் அட்லாண்டிக் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles