‘அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கங்களிடம் பொய்களுக்கு பஞ்சமில்லை’ – உதயா

மலையகத்தில் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும் பொய் பிரச்சாரங்களுக்கு இன்று பஞ்சமில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் என்பதால் தொழிற்சங்கத்திற்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்காக அரசாங்க ஆதரவு தொழிற்சங்கங்கள் பல்வேறு பொய் பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாக ஹட்டனில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்,

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

கடந்த ஆட்சி காலத்தில் மலையக மக்களுக்கு பாரிய அபிவிருத்திகளை நாம் முன்னெடுத்தோம். ஆனால் இன்று எல்லா இடங்களிலும் அடிக்கல் மாத்திரமே நாட்டப்படுகிறது. ஆனால் வீடுகள் கட்டப்படுவதாக இல்லை. சில இடங்களில் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி 8 மாதங்களுக்கு மேலாகியும் வீடுகளை காணவில்லை. புற்கள்தான் முளைத்துள்ளன.

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் பல காபட் பாதைகள் புனரமைக்கப்பட்டன. ஆனால் இன்று ஓரிரு வீதிகளுக்கு அடிக்கல் மாத்திரம் நாட்டிவிட்டு கடந்த அரசாங்கத்தில் ஒரு வேலைத் திட்டமும் நடைபெறாதது போல கதைக்கின்றனர். பாதைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். ஆனால் வேலை தொடங்கவில்லை. வேலை தொடங்க மூன்று மாதங்கள் செல்லும் என்கின்றனர். அப்படியானால் ஏன் இப்போதே அடிக்கல் நாட்ட வேண்டும்? தொழிற்சங்க உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்ளவே இந்த ஏமாற்று நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சந்தா பணத்தை ஜனவரியில் இருந்து நிறுத்தப் போவதாக பிரச்சாரம் செய்து அனைவரையும் அவர்களது தொழிற்சங்கத்தில் இணையுமாறு கூறி வருகின்றனர். இது ஒரு ஏமாற்று வார்த்தை. கடந்த கொரோனா காலத்திலும் சந்தாவை நிறுத்துவதாக கடிதம் அனுப்பி ஒரு மாதத்தில் மீண்டும் சந்தா அறவிட்டனர். உண்மையில் சந்தா தேவையில்லை என்றால் நிரந்தரமாக நிறுத்தி இருக்கலாமே. சந்தா இன்றி தொழிற்சங்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று கூறும் இவர்களே சந்தாவை நிரந்தரமாக நிறுத்தப் போவதாக கூறுகின்றனர். எனவே இது வெறும் ஏமாற்று வித்தை என்பதை மக்களுக்கு தௌிவுபடுத்த வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் மிகவும் குறைந்தளவு நிதியே தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வீடமைப்புக்கு 1500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 12 மாவட்டங்களுக்கு வீடமைப்புத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்படி பார்க்கையில் நுவரெலியா மாவட்டத்தில் 500 வீடுகளைக்கூட கட்ட முடியாது. ஆனால் ஆயிரக்கணக்கில் வீடுகளை கட்டுவது போல பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்த அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. எல்லாமே 1000 ரூபா போல பொய்தான். குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்தியை சந்தித்த அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வாக்களித்த மக்களே அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்.

எனவே இவ்விடயங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி நமது மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles