அரசாங்கத்தால் இருட்டடிப்பு செய்யப்படும் விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. அந்தவகையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர்மீது ஜே.வி.பி. நேரடி குற்றச்சாட்டை முன்வைத்தது.
ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் இருந்த நபர் செலவளித்துள்ளார். அவரின் மகன்மார் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினர். புலனாய்வு தகவல் கிடைத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத தரப்பினருக்கு இன்று அரசியல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டும் பொறுப்பு எமக்குள்ளது. எதிரணியாக உள்ளாட்சி சபைகளில் இணைந்து செயற்படுகின்றோம். அந்த வகையில் விடயங்களை சுட்டிக்காட்டும் வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கின்றோம்.” – என்றார்.