ஆயிரம் ரூபா குறித்து மார்ச் 1 ஆம் திகதி நல்ல முடிவு வரும் – இ.தொ.காவின் மாரிமுத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான நியாயமான தீர்வொன்றினை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி எட்ட முடியும் என இ.தொ.கா உப தலைவரும், தேயிலை வளர்ப்பு மற்றும் உற்பத்தி வணிகத்திற்கான சம்பள நிர்ணய சபையின் அங்கத்தவருமான சட்டத்தரணி கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது இ.தொ.காவின் இலக்கு. எனினும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கு இணங்கவில்லை. எனவே, அரசாங்கத்தின் தலையீட்டின் பேரில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் சம்பள நிர்ணய சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி கடந்த 8ஆம் திகதி நடந்த சந்திப்பின் போது இ.தொ.கா முன்மொழிவொன்றை சமர்ப்பித்தது. இதன்படி 900ரூபாய் அடிப்படை சம்பளமும் 100ரூபாய் வாழ்க்கை செலவு புள்ளி வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இதனை ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிற்சங்க சேவையாளர் சங்கத்தின் சார்பில் பி.ஜி சந்திரசேன வழிமொழிந்திருந்தார். அன்று எமது யோசனை மூன்று வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதன் பின் 15ஆம் திகதி வரை ஆட்சேபனை கோரப்பட்டு, 19ஆம் திகதி நடைபெறவிருந்த சம்பள நிர்ணய சபை பரிசீலனை செய்யப்படவிருந்தது.

எனினும் அன்றைய தினம் தேயிலைக்கான நிர்ணய சபையில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளும் அரசாங்கத்தின் சார்பில் மூன்று பிரதிநிதிகளும் கம்பனிகள் சார்பில் ஒருவர் மாத்திரமே கலந்துக்கொண்டிருந்தபடியால், இதனை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதே போலவே இறப்பர் சம்பள நிர்ணய சபைக்கும், தொழில் சார்ந்த பிரதிநிதிகள் யாவரும் சமூகமளித்திருந்தாலும், கம்பனிகள் சார்பில் எவரும் பிரசன்னமாகியிருக்கவில்லை.

எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி பிற்பகல் 2 மணிக்கு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது நல்ல முடிவு கிடைக்கும்.” – என்றார்.

Paid Ad