இது கள்வர்களின் ஆட்சி! சஜித் சாட்டையடி

” திருடர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது. இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது? மக்களை வீழ்த்திவிட்டு, பிணங்கள் மீது நின்று மீண்டெழுவதில் பயன் இல்லை.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியவை வருமாறு,

” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர், கோடிஸ்வரர்களுக்கு 600 பில்லியன் ரூபா வரிச்சலுகை வழங்கியதால் அரச வருமானம் 12 வீதத்திலிருந்து 8 வீதமாக சரிந்தது. இதனால் சர்வதேச நிதி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை பின்னிலைப்படுத்தப்பட்டது. சர்வதேச மூலதனச் சந்தைக்கு சென்று கடன்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அந்திய செலாவணி கையிருப்பை பயன்படுத்தி கடன் செலுத்தினர். இதனால் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்துடன், திட்டமில்லாத பொருளாதாரக் கொள்கைகளால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.

தன்னைசூழ முட்டாள்களை வைத்துக்கொண்டு தன்னிச்சையாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச, இருக்கின்ற அதிகாரம் போதாதென 20 ஆவது திருத்தச்சட்டத்தையும் நிறைவேற்றி நாட்டை நாசமாக்கினார். இறுதியில் வீடு செல்ல வேண்டி ஏற்பட்டது.

மக்கள் இணைந்து ராஜபக்சக்களை விரட்டினாலும், ராஜபக்சக்களின் ஆட்சிதான் தற்போது தொடர்கின்றது. தம்மை பாதுகாக்ககூடிய ஒருவரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி ஆக்கியுள்ளனர். ராஜபக்சக்களை காக்க 134 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இது. திருடர்களை பாதுகாப்பார்களேதவிர, திருடர்களை பிடிக்கமாட்டார்கள். இது ராஜபக்சக்களை காப்பதற்கான அரச பொறிமுறையாகும். ” – என்றார்.

Related Articles

Latest Articles