இது தேர்தல் காலம் அல்ல. பெருந்தொற்று காலம். இதனால் வாழ்வா, சாவா என்ற கட்டத்தில் நாம் அனைவரும் போராடிக்கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் பட்டினி சாவுக்கும் இடமளிக்கமுடியாது. எனவே, 2000 ரூபா நிவாரணக் கொடுப்பனவை பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் இன்று வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதைத்தவிர வேறு வழியில்லை. தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, மரண எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் விஞ்ஞானப்பூர்வமான முடக்கமே அவசியம். இதனை அரசு செய்யாவிட்டாலும், பகுதியளவிலேனும் முடக்க நிலைமை அமுலில் இருப்பது ஆறுதல் அளிக்கின்றது.
நெருக்கடியான சூழ்நிலையில் நாம் அரசியல் நடத்தவில்லை. தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்கி அதனை செயற்படுத்துவதற்கு சர்வக்கட்சி பொறிமுறையை உருவாக்குமாறு வலியுறுத்தினோம். இதையும் ஆளுந்தரப்பு செய்யவில்லை. இருந்தாலும் தற்போதைய நிலைமையை தேசிய பேரிடராகக்கருதி எம்மாலான ஒத்துழைப்புகளை வழங்கிவருகின்றோம். மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்காக நியாயப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்து, அரச பொறிமுறையை நல்வழிப்படுத்த முற்படுகின்றோம்.
ஆனால் ஆளுந்தரப்பு திருந்துவதாக இல்லை. தற்போது வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவிலும் அரசியல் நடத்தப்படுகின்றது. வாழ்க்கைச்செலவு உச்சம் தொட்டுள்ள நிலையில் இந்த 2 ஆயிரம் ரூபா என்பது இரு நாட்களுக்குகூட போதாது. இருந்தும் அதனைக்கூட முறையாக வழங்க முடியாத நிலைமையிலேயே அரச பொறிமுறை இருக்கின்றது.
பெருந்தோட்டப்பகுதிகளில் நிலைமை மோசம். வீட்டில் ஒருவர் தோட்டத்தில் வேலையென்றால்கூட உப குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. எனவே, வழங்கும் சொற்ப அளவு தொகையை மனிதாபிமானத்துடனும், மனசாட்சியின் பிரகாரமும் அனைவருக்கும் வழங்குமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.










