இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சிதானா என்ற சந்தேகம் எமக்கும் உள்ளது. பசுவின் முன்பகுதி மட்டுமே எங்கள் வசம் உள்ளது. பின்பகுதி வேறு இடத்தில்தான் உள்ளது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களை ஒத்திவைக்க இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேர்தலை பிற்போடுவதற்கு நாம் எதிர்ப்பு. ஜனாதிபதி, பொதுத்தேர்தல் என்பன உறுதி காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். அதற்காக முன்னிலையாவோம். தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எமக்கும் உள்ளது. ஆனால் அது நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இது ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் ஆட்சி என பலர் கூறினாலும் எமது கட்சியில் உள்ள சிலரே அமைச்சரவையில் உள்ளனர். இது எங்கள் ஆட்சி என பலர் கருதினாலும் பசுவின் முன்பக்கம் மட்டும்தான் எமக்கு, பின்பகுதி மற்றைய தரப்பிடம். இது எமது அரசா என்று எமக்கும் சிலவேளைகளில் சந்தேகம் ஏற்படுகின்றது. வடகிழக்கு, ஊவா, கிழக்கு உட்பட ஐந்து மாகாணங்களில் எமக்கு அமைச்சர் ஒருவர் இல்லை. எனவே, இது எப்படி எமது அரசு எனக் கூறமுடியும்?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் ஜனாதிபதி தேர்தலை நடத்திவிட்டு பொதுத்தேர்தலுக்கு சென்றால் வெற்றிபெற்ற கட்சிக்கே வாய்ப்பு அதிகம், அதன்மூலம் மக்களின் உண்மையான பிரதிபலன் தென்படாது.” – என்றார்.