தமிழகம் – தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.
அப்போது பென்னாகரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாமியார், மருமகள் உள்பட 4 பேர் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களது வீட்டில் சோதனை செய்தனர். வீட்டில் இருந்த டிவியின் பின்புறம் தனியாக அறை அமைத்துள்ளனர். அதில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, தீபாவளி பண்டிகை நாளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர், அந்த அறையில் இருந்த 600 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த மாமியார் லட்சுமி மற்றும் மருமகள் மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் உள்ள நிலையில், விடுமுறை நாளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய, ரகசிய அறையில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.