இரத்தினபுரி நகர எல்லையில் வேகமாக பரவும் கொரோனா! 3 பாடசாலைகளுக்கு பூட்டு!!

இரத்தினபுரி நகரில் கொரோனா தொற்று அதிகரிப்பதன் காரணத்தால் அதிகூடிய அவதான நிலை ஏற்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பெகடுவ தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு குழு நேற்று(18) சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுதியில் அவசரமாக கூடி கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மாகாண ஆளுநர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இரத்தினபுரி நகரின் குடுகல்வத்தை பிரதேசத்தில் 20 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டபோது அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி இரத்தினபுரி நகரில் கொரோனா தொற்று அவதான நிலை காரணமாக நகரில் உள்ள 3 பாடசாலைகள் நேற்று(18) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது

இரத்தினபுரி நகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இரத்தினபுரி நகரை அண்மித்த பகுதிகளிலுள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களும் நேற்று(18) முதல் மூடுவதற்கு இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அத்தோடு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஏனைய அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் பக்தர்கள் இன்றி மத வழிபாடுகளை நடாத்துமாறு இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு குழு கேட்டு கொண்டுள்ளது.

இரத்தினபுரி செலான் வங்கி சந்தி தொடக்கம் இரத்தினபுரியில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போ சந்தி வரை உள்ள அனைத்து வியாபார நிலையங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று(18) முதல் மூடுவதற்கும் இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே மேற்படி வியாபார நிலையங்களை மூடுமாறு இரத்தினபுரி நகர வியாபாரிகளிடம் இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு குழு கேட்டு கொண்டுள்ளது.

இரத்தினபுரி சீவலி மகா வித்தியாலயம், கொடிகமுவ தர்மராஜ வித்தியாலயம், இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

அத்தோடு இரத்தினபுரி நகரின் மணிக்கூட்டுக்கோபுரம், இரத்தினபுரி நகரின் மாமரத்து சந்தி, இரத்தினபுரி தெமுவாத்த ஆகிய பகுதிகளில் மாணிக்கக்கல் வியாபாரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணிக்கக்கல் வியாபாரம் செய்வதற்கென இரத்தினபுரி சீவலி மைதானத்தை பயன்படுத்துமாறும் மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஒழிப்பு குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

இரத்தினபுரி நகரில் நடைபாதை வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இரத்தினபுரி கொடிகமுவ பிரதேசத்தில் போக்குவரத்து தொடர்ந்து வரையறுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் 572 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி நகரில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதன் காரணத்தால் இரத்தினபுரி நகர பிரதேசங்களுக்கு வருகை தருவதை வரையறுக்கப்பட வேண்டும் என இரத்தினபுரி சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளனர்.

மேற்படி கலந்துரையாடலில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இரத்தினபுரி மாநகர சபையின் நகர பிதா டிரோன் அத்தநாயக்க, சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் கபில கன்னங்கர,இரத்தினபுரி மாவட்ட தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் லக்மால் கோனார, இரத்தினபுரி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அமரகோன்,இரத்தினபுரி உதவி பொலிஸ் அதிகாரி நிஷங்க உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles