ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை, டெல்லி அணிகள் இன்று களம் காண்டுகின்றன.
13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (16 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (14 புள்ளி), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின.
இந்த நிலையில் துபாயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
9 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்த மும்பை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது.
தொடக்கத்தில் வீறுநடை போட்ட டெல்லி அணி முதல் 9 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்று பிரமாதப்படுத்தியது. ஆனால் அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் தோற்றதால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பதே கேள்விக்குறியானது. எப்படியோ கடைசி லீக்கில் பெங்களூருவை தோற்கடித்து 8 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றில் கால்பதித்தது.
தற்போது விளையாடும் 8 அணிகளில் ஐ.பி.எல்.-ல் இறுதிசுற்றை எட்டாத ஒரே அணி டெல்லி தான். அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டி வரலாறு படைக்க அருமையான வாய்ப்பு கனிந்துள்ளது.