இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கும் பிரான்ஸ் ஆதரவு !

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று (28) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் கொழும்பில் சிநேகபூர்வ மற்றும் சாதகமான இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சர்வதேச தொடர்புகளில் பிரான்ஸின் ஈடுபாட்டிற்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் இந்து – பசுபிக் வலய பிரச்சினைகள் தொடர்பில் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி இணக்கப்பாட்டிற்கான மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தான் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் நினைவு கூர்ந்தார். இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்ததோடு, இலங்கையின் நான்காவது பெரிய கடன் வழங்குனர் என்ற வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

மேற்படி சந்திப்பின் நிறைவில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன்,

“இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தின் திறந்த, விரிவான மற்றும் சுபீட்சமான இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பொதுவான இலக்குகளை பகிர்ந்து கொள்ளும் இரண்டு நாடுகளாகும். நாம் அதனை கொழும்பில் மீண்டும் உறுதிப்படுத்தினோம்: எங்கள் 75 வருடகால இராஜதந்திர உறவுகள் எங்களின் ஒருமைப்பாட்டிற்கான வலுவான இணக்கப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது.” என குறிப்பிட்டிருந்தார்.

அரசியல், பொருளாதாரம், சுற்றுலா, காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களுக்கும் இடையேயான கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கிய அம்சங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பாடசாலை ஒன்றை நிறுவுதல், இலங்கையில் அபிவிருத்திக்கான பிரான்ஸ் பணியகம் (AFD) ஒன்றை நிறுவுதல் உயர்மட்ட இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பித்தல், கல்வித்துறையில் ஒத்துழைப்பு மற்றும் கடல்வழி ஆள்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், தற்போதைய உலகளாவிய நகர்வுகள், பிராந்திய மற்றும் பலதரப்பு நலன்கள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கருத்து பரிமாறிக் கொண்டனர். பிரான்ஸ் அங்கம் வகிக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய சம்மேளனத்தின் (IORA) எதிர்வரும் தலைமைப் பதவிக் காலத்தில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட ஆர்வமாக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார். பிரான்ஸ் பங்கேற்கும் இந்து சமுத்திர சமமேளனத்திற்கான தனது அர்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வெளிப்படுத்தினார்.

2023 ஜூன் 22 முதல் 23 வரையில் பிரான்ஸ் ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு காலோசிதமானது என்பதை அதனில் பங்கேற்றவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நிலையான எதிர்காலத்திற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தி, பாரிஸ் நிகழ்ச்சி நிரலில் இணைவதற்கான இலங்கையின் இணக்கப்பாடு தொடர்பிலும் இங்கு அறிவிக்கப்பட்டது.


பிரான்ஸின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் கொலோனா, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர், ஜீன் பிரானகோசிஸ் பெக்டட் (Jean-Francoise Pactet) பிரான்ஸ் ஜனாதிபதியின் ஆலோசகர்களான பெபியன் மெண்டன்( Fabien Mandon), வலிட் பவூக் (Walid Fouq) மற்றும் ஜோஸ் செரஸ் (Josue Serres) பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் ஆசிய வலயத் தலைவர் பெனாய்ட் கைடி, பிரான்ஸ் ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் ஜோன்ஸ் பயார்ட், வெளிக்கள வலயங்கள் தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் பிலிப் விஜீயர், வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகர் பிலோமியன் கார்டினொக்ஸ் ஆகியோர் பிரான்ஸ் ஜனாதிபதியின் தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) ஷோபினி குணசேகர ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான இலங்கைக் குழு சார்பில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles