இலங்கை அணிபோல மீண்டெழுவோம் – ஜனாதிபதி

கிரிக்கட் வீரர் தசுன் சானக்க மற்றும் அவரது அணியினர் ஆசிய கிண்ணம் வரை முன்னேறுவதற்கு தாம் அடைந்த தோல்வியை ஒரு பலமான சக்தியாக பயன்படுத்திக் கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியைப் போல் சிந்தித்தால் உலகின் முன் நாட்டை வெற்றி பெற வைப்பதும் கடினமான காரியம் அல்ல என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

குழுவாக இணைந்து செயற்பட்டமை அவர்களின் வெற்றிக்கு உதவியதாகவும் ஜனாதிபதி  மேலும் சுட்டிக்காட்டினார்.

இருபதுக்கு 20 கிரிக்கட் ஆசியக் கிண்ணம், பன்னிரண்டாவது வலைப்பந்து ஆசியக் கிண்ணம் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை அணிகளை கௌரவிக்கும் விழா, நேற்று (16) பிற்பகல் சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஆசியக் கிண்ணம், வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் ஒரு வீராங்கணைக்கு தலா 02 மில்லியன் ரூபாவும் இரண்டு பயிற்சியாளர்களுக்கு தலா 02 மில்லியன் ரூபா வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.

அண்மையில் பிரித்தானியாவின் பர்மிங்காமில் நடைபெற்ற 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை  04 பதக்கங்களை வென்றது. பரா விளையாட்டுப் பிரிவில் வட்டு எறிதலில் பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தையும், 100 மீற்றர் போட்டியில் யுபுன் அபேகோன், பெண்களுக்கான 57 கிலோ மல்யுத்தப் போட்டியில் நெத்மி அஹிம்சா போருதொட்ட மற்றும் 55 கிலோ எடைப் பிரிவில் திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு விளையாட்டு நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவருக்கு 05 மில்லியன் ரூபாவும், அவர்களது பயிற்சியாளர்களுக்கு அத்தொகையில் 25 சதவீதமும் வழங்கப்பட்டது.

விளையாட்டு அமைச்சு மற்றும் விளையாட்டு சங்கங்களின் பங்களிப்புடனும் Dialog Asiata இன் உத்தியோகபூர்வ அனுசரணையுடனும் Cinnamon Hotel and Resort மூலம் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாயகத்தை ஆசியாவின் உச்சிக்கு உயர்த்திய அனைத்து விளையாட்டு வீரர்களை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

இதற்கு முன்னர் இவ்வாறான விளையாட்டின் வெற்றியை அரசியல்வாதிகள் பங்குபோட்டுக் கொண்டதாகவும், இந்த கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த வெற்றி அர்ப்பணிப்புள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு 200 சதவீதம் உரித்தாகும் என்றும் தெரிவித்தார்.

விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசிங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, வலைப்பந்து சங்கத்தின் தலைவர் விக்டோரியா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles