இலங்கை, இந்தியாவுக்கிடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கை வரவுள்ளார் எனவும், அவரது பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒழுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் உரையாற்றிய அமைச்சர்,

“எமது அயல்நாடான இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியுள்ளோம். எமக்கான முதலாவது வெளிநாட்டு இராஜதந்திர அழைப்பை இந்தியாவே விடுத்திருந்தது. அதன்மூலம் பொருளாதார ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் முதல்வாரத்தில் இலங்கை வருகின்றார். அவரின் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் புதிய சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. சம்பூர் சூரியமின் நடவடிக்கை ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

ஆன்மீக நிலையங்களுக்குரிய சூரியமின் கட்டமைப்பை வழங்குவதற்குரிய திட்டம் விரிவுபடுத்தப்படும். தோட்ட வீடமைப்புக்குரிய உதவிகள் உள்ளிட்ட விடயங்களையும் நட்புறவு மூலம் பெற்றுள்ளோம்.

சீன பயணத்தின்போதும் பல இராஜதந்திர வெற்றிகள் கிடைக்கப்பெற்றன.” – என்றார்.

Related Articles

Latest Articles