இலங்கை, இந்திய பாலம்: கம்மன்பில போர்க்கொடி!

இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை உட்பட பல விடயங்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய இலங்கை, இந்திய பாலம் அமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் பாலம் அமைக்கும் யோசனையை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

இந்தியா என்ற நாடு உருவாகும்போது ஏன் இலங்கை இணைக்கப்படவில்லை? இந்தியாவை பிரிட்டன் ஆண்டபோது இந்தியா ஊடாக அல்லாமல் இலங்கையை தனியாக ஆண்டது ஏன்? இலங்கையென்பது தனிநாடாகவே இருந்துவருகின்றது. கடலால் சூழப்பட்டுள்ள எமது நாட்டுக்கென தேச எல்லை உள்ளது.

நாம் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறி இருந்தால் மகா பாரதத்தின் ஒரு பாகமாகவே எமது நாடு இருந்திருக்கும்.தனி நாடுக்குரிய கட்டமைப்பை இயற்கை எமக்கு பரிசாக வழங்கியுள்ளது. எனவே பாலம் அமைத்து இயற்கை வழங்கிய பரிசை நாசமாக்கிவிடக்கூடாது.

எமது நாட்டில் போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது. மலேரியா இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் அவ்வாறானதொரு சூழ்நிலை இல்லை. சமூக பிரச்சினையும் உள்ளது. எனவே, புதிய பிரச்சினைகள் உருவாக இடமளிக்ககூடாது. தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், சமூக உட்பட பல விடயங்களுக்கு இந்த பாலம் அமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல.”- என்றார்.

Related Articles

Latest Articles