உதயாவை சீண்டும் திலகருக்கு பதிலடி கொடுத்து பிலிப் விசேட அறிக்கை

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தை அதன் பிரதித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் கையகப்படுத்தியுள்ளார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தில் எந்த விதமான உண்மையும் கிடையாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” தொழிலாளர் தேசிய சங்கம் 1965 ஆம் ஆண்டு அமரர் வீ. கே. வெள்ளையன் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும். அதற்கென சொந்தமான கட்டிடம் எதுவும் இல்லாத போதிலும் ஹட்டன் நகரில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது.
தொழிற்சங்கப் பணியில் திறமையாக செயற்பட்டு வந்த இந்த சங்கத்தின் ஸ்தாபகர் வெள்ளையன் மறைவுக்குப் பின்னர் 1980 களின் இறுதியில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாண சபைக்கு ஓர் உறுப்பினர் தெரிவாகியிருந்தார். அடுத்து வந்த தேர்தலிலும் ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய உறுப்பினர்கள் இருந்தார்கள்.
இந்த நிலையில் தொழிலாளர் தேசிய சங்கம் குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. சங்கத்தை வேறு சிலர் கைப்பற்றிக் கொண்டதோடு, அதன் ‘மயில்’ சின்னமும் விற்கப்பட்டிருந்தது. அலுவலகத்துக்கு உரிய மாதாந்த வாடகை, உத்தியோகத்தர்களின் சம்பளம் முதலானவற்றை வழங்க முடியாத நிலையில் அதன் அங்கத்தவர்கள் பலர் மாற்றுத் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டு வந்தார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் தான் இப்போதைய எமது தலைவர் பழனி திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பொறுப்பேற்றார். அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையால் சங்கம் புத்துயிர் பெறத் தொடங்கியது. ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, உத்தியோகத்தர்களுக்கு சம்பளம், அவர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றோடு, அலுவலகக் கட்டிடத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவை முதலானவற்றையும் செலுத்தி மீண்டும் சங்கத்தை எழுச்சி பெறச் செய்தார்.
அதேநேரம், தலைமை அலுவலகக் கட்டிடம் அமைந்துள்ள கட்டிடத்தை உரிமையாளர் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்த போது, அதை பிரதித் தலைவர் உதயகுமார் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்து 2009.06.10 இல் தமது பெயரில் விலைக்கு வாங்கிக் கொண்டார். அதற்கான சாட்சிகளில் ஒருவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கையொப்பமும் இட்டிருந்தார். அதே கட்டிடத்தில் அலுவலகம் தொடங்கி இயங்கிவருகிறது. எனினும், அதற்கான வாடகை எதனையும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பிரதித் தலைவர் உதயகுமார் இ.தொ.கா. வில் இணைந்து கொள்ள நேர்ந்த போதும் அவர் எமது தலைவர் திகாம்பரத்தைப் பற்றிய விமர்சனத்தையோ, கட்டிடத்துக்கு வாடகை தர வேண்டும் என்ற கோரிக்கையையோ முன்வைத்தது கிடையாது.  அரசியல், தொழிற்சங்கப் பணிகள் வழமைபோல் இன்றும் இடம்பெற்று வருகின்றன.
எமது சங்கத்தைப் பொறுப்பேற்ற தலைவர் திகாம்பரம் அதன் அரசியல் பிரவேசத்துக்கு பாரிய பங்களிப்பை செய்து அரசியலில் அஞ்சா நெஞ்சம் படைத்தவராக இருந்த அவரது தூர நோக்கினால்  மலையகத்தில் அரசியல் மாற்றத்துக்கும், அபிவிருத்திப் பணிகளுக்கும் காரணமாக இருந்துள்ளார். அதற்குப் பக்கபலமாக பிரதித் தலைவர் உதயா இருந்து வந்துள்ளார். அதன் பயனாக 2011 ஆம் ஆண்டு எமது சங்கத்தின் சார்பில் ஒரு உறுப்பினரைக் கொண்டிருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் 2015 இலும், 2020 இலும்  இரண்டாக அதிகரித்திருந்தது.
அதேபோல், 2013 இல் மத்திய மாகாண சபையில் மூன்று உறுப்பினர்களையும், 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 40 உறுப்பினர்களையும் பெற்றுக் கொளளக் கூடியதாக இருந்தது. தொழிற்சங்க அங்கத்தவர் தொகையும் அதிகரித்திருந்தது.
இவ்வாறு கட்சி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய நேரத்தில், கட்சியில் பிளவுகளை ஏற்படுத்தி, எமது கட்சியோடு இணைந்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. இராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினராக இருந்த எம். உதயகுமார் போன்றோர் கட்சியில் இருந்தால் தாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதால், அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி இ.தொ.கா. வில் இணைந்து கொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரே  காரணமாக இருந்துள்ளார். எனினும், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற உதயகுமார் மீண்டும் எமது கட்சியுடன் ஐக்கியமாகி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் மீண்டும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இரண்டாக தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது, கட்சியிலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தலைமைக்கு எதிராக செயற்பட்ட காரணத்தால் கட்சியின் உயர் மட்டக் குழுவின் ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைய, அண்மையில் இடைநிறுத்தப்பட்டும், வெளியேற்றப்பட்டும் உள்ளார்கள். கட்சியின் ஊடாக அரசியலுக்கு பிரவேசித்து தம்மை வளர்த்துக் கொண்டவர்களை நாம் வெளியேற்றுவதற்கு  முன்னதாகவே, தாங்களாகவே கட்சியின் பொறுப்புகளிலிருந்து இராஜினாமா செய்து விட்டதாக ஊடகங்களில் தெரிவித்து வந்தவர்கள், இப்போது உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்களாக கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக அவதூறு பரப்புவதிலும், அனாவசியமான விமர்சனங்களை மேற்கொள்வதிலும் குறியாக இருந்து வருகின்றார்கள்.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கும் என்ற உண்மை நிலையை எமது அங்கத்தவர்கள் நன்றாக உணர்வார்கள். நாம் என்றும் போல, கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், ஒருவரே தொடர்ந்து பதவி வகித்து சுகபோகம் காணுவதற்கு இடமளிக்காத வகையில் எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கவும், உத்தியோகத்தர்களை ஜனநாயக ரீதியில் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யவும் தயாராக இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles