பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு, மேலதிக கொழுந்திற்கான கொடுப்பனவை எவ்வாறு பெற்றுக் கொடுப்பதென்று என்பதும் தெரியும் இ.தொ.காவின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
” ஆரம்பம் முதல் இன்று வரை இ.தொ.கா மக்கள் உரிமைகளை போராடிப் பெற்றுக் கொடுத்ததாகவே சரித்திரம் உள்ளது. மற்றவர்களை போல் கையேந்தி நின்றதாக சரித்திரம் இல்லை.
தற்போது கொழுந்து அதிகமாக இருக்கும் காலம். எனவே மக்களின் மேலதிக கொடுப்பனவு விடயத்தில் கம்பனிகள் மாற்று வழியின்றி அடிபணிந்து தான் செல்ல வேண்டும். மறைந்த தலைவர் கெளரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் முன்மொழிவுக்கு அமைய ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு இ.தொ.கா. முழு வீச்சுடன் செயற்பட்டது. அதில் வெற்றியும் கண்டுள்ளது. எனவே, மேலதிக கொடுப்பனவான 40 ரூபாவை எவ்வாறு பெறுவது என்பது எமக்கு தெரியும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்காத தோட்டங்களில் , இனிவரும் காலங்களில் மேலதிக வேலைகளில் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட மாட்டார்கள்.” – எனவும் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்தார்.