பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி நாளை (05) நடைபெறவுள்ள அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளனர் என்று நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பிரதேச சபை காரியாலயத்தில் இன்று (04.02.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முயற்சித்தபோதும் கடந்த பேச்சுவார்த்தையின் போது 200 ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே பெற முடிந்தது.
இன்று இ.தொ.கா வின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இந்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றார்.
அதன் ஆரம்பகட்டமாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும், சம்பள நிர்ணய சபைக்கும், அரசாங்கத்திற்கும் ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னோடி ஏற்பாடான நாளை (05.02.2021) அமைதியான ஒரு நாள் பணிபகிஷ்கரிப்பை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒண்றிணைந்து ஒற்றுமையாக கைகோர்க்க வேண்டும்.
இந்த பணிபகிஷ்கரிப்புக்கு அனைத்து தோட்ட தொழிலாளர்களும் மலையகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், ஆசிரிய தொழிற்சங்கங்கள், இளைஞர்கள், நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பொது மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.” – என்றார்.
க.கிசாந்தன்
