நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயாரில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எனினும், சவாலை ஏற்குமாறு கட்சி கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அது பற்றி பரிசீலிக்கலாம். ஆனால் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
“ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குமாறு நான் கோரவில்லை. மாறாக பாதுகாப்பு வழங்குமாறே வேண்டுகோள் விடுத்துள்ளேன். அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
எனினும், வாகனம் வழங்கப்பட்டால் அதனை நிராகரிக்கமாட்டேன். ஏனெனில் பதுளையில் இருந்து கொழும்பு வருவதற்கு வாகனம் அவசியம்.
அதேவேளை, எதிரணி உறுப்பினருக்குரிய கடமையை நான் சரிவர நிறைவேற்றி வருகின்றேன். அரசாங்கம் தவறிழைக்கும்பட்சத்தில் அதனை சுட்டிக்காட்டும் உரிமை எனக்கு உள்ளது.
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் நான் கலந்துகொள்வோம். சுதந்திரக்கட்சியாக நாம் களமிறங்குவோம்.” எனவும் சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. குறிப்பிட்டார்.










