“ இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அவ்வுடன்படிக்கைமூலம் இலங்கையின் ஊழியப்படையணிக்கு பாதிப்பு ஏற்படாது.” – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
எட்கா உடன்படிக்கைமூலம் இந்திய முதலீட்டாளர்கள், இந்திய தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம் என்பன இலங்கைக்கு வருவதால் இலங்கை தொழிலாளர்களுக்கு, ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் அல்லவா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அலிசப்ரி இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அவ்வாறானதொரு நிலை ஏற்படாது. முதலீடுகள் வரும். முதலில் நாம் ஒரு விடயத்தை தெரிவித்துக்கொள்ள வேண்டும், உலக பொருளாதாரம் என்பது 86 ஆயிரம் பில்லியன்களாகும். இலங்கையின் பொருளாதாரம் என்பது 74 பில்லியன்களாக உள்ளது.
கடந்த காலத்துக்கு அஞ்சி செயற்பட முடியாது. இந்தியா இன்று வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் கொடுக்கல் – வாங்கல்களில் ஈடுபடுகின்றன. எனவே, இந்திய தரப்பில் இருந்து எமது நாட்டுக்கு கிடைக்ககூடிய பொருளாதார பங்களிப்பு பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டும். போட்டி தன்மை உருவாகும். அப்போதுதான் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகரலாம். இதற்கு முதலீட்டாளர்கள் வர வேண்டும்.
இலங்கை சந்தையை மட்டும் குறிவைத்து முதலீட்டாளர்கள் வருவதில்லை, அவர்களுக்கு பாரியதொரு சந்தை வாய்ப்பு அவசியம். இதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டும். அதன்நிமித்தமே வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ப்படவுள்ளன. ஆசியான் நாடுகள், சீனா, பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகள் இதே வழிமுறைதான் பின்பற்றின. எனவே, குறித்த உடன்படிக்கையை சிறப்பாக பயன்படுத்தினால் எமது நாட்டுக்கு நன்மை கிட்டும்.” – என்றார்.










