பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் எதிரணியின் பலவீனம் புலப்படுகின்றது என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பிரதமர் 23 ஆம் திகதி நாடு திரும்புகின்றார். அவருக்கு எதிராக எதிரணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளன. அதற்காக நாம் காத்திருக்கின்றோம்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
பிரேரணைக்கு கையொப்பம் திரட்டி, அதனை கையளிக்காமல் இருப்பது எதிரணியின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதத்துக்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வழங்குவதற்கு நாம் தயார்.” – என்றார் பிமல் ரத்நாயக்க.










