” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பயணம் சாதகமானது அல்ல. ஆட்சியாளர்களுக்கு அனுபவம் இல்லை. எனினும், கோட்டாபய ராஜபக்சபோல் அதிகாரத்தை விட்டு செல்லவும் முடியாது. எனவே, எதிரணியை ஒடுக்குவதற்குரிய நடவடிக்கை தற்போது இடம்பெறுகின்றது.”
இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. எமது மக்கள் புத்தியை பயன்படுத்தாது, மனதை பயன்படுத்தியே வாக்களித்துவருகின்றனர். கடந்த முறையும் அதுவே நடந்தது. மூன்று மாதங்கள் வரிசைகளில் நின்ற விரக்தியை தேர்தல்மூலம் தீர்த்துக்கொண்டனர். மற்றும்படி தேசிய மக்கள் சக்திக்கு முடியும் என மக்கள்கூட நம்பவில்லை.
அநுரகுமார புத்திசாலி. ஆனாலும் அனுபவம் இல்லை. அவர்களின் அமைச்சரவைக்கு அனுபவம் இல்லை. அதனால்தான் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது.
எனினும், கோட்டாபய ராஜபக்சபோல ஜே.வி.பியினரால் அதிகாரத்தை கைவிட்டுச்செல்ல முடியாது. 60 வருடங்கள் போராடி, ஆயிரக்கணக்கானோரை இழந்தே அவர்கள் ஆட்சியை பெற்றனர். எனவே, தமது இயலாமையை மறைப்பதற்காக எதிரணியை ஒடுக்குவதற்கு தயாராகிவருகின்றனர். இதனை எதிர்கொள்வதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். அதற்குரிய பணியை தற்போது செய்துவருகின்றேன்.
தேங்காய் தும்பால் தனித்து முடியாது, ஆனால் தேங்காய் தும்புகளை தரித்து கயிறாக்கினால் அதன்மூலம் யானையைக்கூட கட்ட முடியும்.” – என்றார்.