நடிகர் ரஜினிகாந்த் சங்கி கிடையாது என்றும் அவர் அவ்வாறு இருந்திருந்தால் லால் சலாம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கமாட்டார் என்றும் ரஜினியின் மகளும் படத்தின் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்னு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படல் லால் சலாம்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கான அறிவிப்பு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் லைகா சுபாஸ்கரன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட லால் சலாம் குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “அப்பா சங்கி இல்லங்க.. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. ரஜினிகாந்த் எனும் மனிதர் சங்கியாக இருந்தால் லால் சலாம் எனும் படத்தில் இருக்கமாட்டார். இதை நான் ஒரு இயக்குநராக சொல்ல வேண்டும் என நினைக்கின்றேன். அது நீங்கள் படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும்” எனத் தெரிவித்துள்ளார்.