போர் காலத்தில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர்மீது போர்க்குற்றச்சாட்டு முன்வைப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இது எமது நாட்டு இராணுவத்தின் அபிமானம்மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். எனவே, எமது ஆட்சியின் இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
சில நாடுகளில் இடம்பெறும் யுத்தங்களின்போது சிவிலியன்கள் அப்பட்டமாகக் கொல்லப்படுகின்றனர். இது தொடர்பில் எந்தவொரு நாடும் வாய் திறப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மகாசங்கத்தினர் மற்றும் இராணுவத்தினரை அவமதிப்பதை சிலர் நவீன போக்காக கொண்டு செயற்படுகின்றனர். ஒரு காலகட்டத்தில் மகா சங்கத்தினர் பயணிக்கும் வாகனம் மற்றும் அவர்களின் நடத்தை பற்றி கதைக்கப்பட்டது. இது திட்டமிட்ட அடிப்படையில் பௌத்த கலாசாரம்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.
மற்றுமொரு பிரிவினர் இராணுவத்தினரை இலக்கு வைத்து செயற்படுகின்றனர். இராணுவத்தினரை நீதிமன்றங்களுக்கு கொண்டுச்சென்றனர்.
போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஒரு புறத்தில் சிறையில் இருந்து புலிகள் விடுவிக்கப்படும்போது மறுபுறத்தில் படையினரை குற்றவாளிகளாக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டது. சர்வதேச நீதிமன்றம்முன் கொண்டுசெல்வதற்கும் முயற்சித்தனர்.
உலகில் சில நாடுகளில் நடக்கும்போரை பார்க்கும்போது சிவிலியன்கள் அப்பட்டமாக கொல்லப்படுகின்றனர். எந்தவொரு நாடும் அதைப்பற்றி கதைப்பதில்லை. நாம் மனிதாபிமான நடவடிக்கையையே முன்னெடுத்தோம். எமது படையினர், தமிழ் மக்களை பாதுகாத்தனர்.
இப்படியானவர்கள்மீதே போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. எமது ஆட்சியின் இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும். நலன்புரி விடயங்களும் உறுதிப்படுத்தப்படும்.
அதேபோல பௌத்த கலாசாரத்துக்கு பொருத்தமற்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் எமது ஆட்சியில் இடமளிக்கப்படமாட்டாது.” – என்றார் நாமல் ராஜபக்ச.
