” என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் விருதை சமர்ப்பிக்கிறேன்”

என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய திரைப்பட துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்குஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையில், வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டு தோறும், தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய

திரைத்துறையினருக்கு கிடைக்கும் கவுரவமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இந்த விருது கருதப்படுகிறது.

தமிழ் திரையுலகில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்தாதா சாகேப் விருதை பெறுகிறார். தாதாசாகேப் விருது கடந்த 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய திரைப்படத் துறையின் தந்தை என கூறப்படும் தாதாசாகேப் பால்கேவின் பெயரில், திரைத்துறையில் சாதனைபுரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்தாண்டு இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் விருதுவழங்கப்பட்டது. இதையடுத்து, தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள்

இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவந்த பேருந்து ஓட்டுநரான எனது நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையின் பிடியில் வாடியபோது என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த சகோதரன் சத்யநாராயணாவிற்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது இயக்குநர் பாலச்சந்தருக்கும்,

திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை வாழ்த்திய தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவரும், நண்பருமான மு.க.ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

Paid Ad