ஐ.தே.க. தலைமைக்கு கடும் போட்டி – நாளை மறுதினம் கூடுகிறது செயற்குழு!

ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைமைப்பதவி கருஜயசூரியவுக்கு வழங்கப்பட்டால் போட்டியிலிருந்து விலகுவதற்கு ரவி கருணாநாயக்க, தயாகமகே, அர்ஜுன ரணதுங்க மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தார்.

இதனையடுத்து ஐ.தே.கவின் தலைவர் பதவிக்காக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் தமது பெயர்களை முன்வைத்தனர். ரவி கருணாநாயக்க, தயாமககே, நவீன்திஸாநாயக்க, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன.

அதன்பின்னர் அர்ஜுன ரணதுங்க மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோரும் தலைமைப்பதவிக்கு போட்டியிடவிருப்பதாக அறிவித்தனர்.

எனினும் தனது உறவினரான ருவான் விஜேவர்தனவுக்கு தலைமைப்பதவியை வழங்கும் வகையிலான காய்நகர்த்தல்களை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையிலேயே கருஜயசூரிய தலைமைப்பதவியை ஏற்க தயார் என்ற அறிவிப்பை விடுத்தார். ஆனால் கருவை ஓரங்கட்டும் விதத்திலான அறிவிப்புகளை ரணில் விக்கிரமசிங்க விடுத்தார். எனினும், ரவி, நவீன், தயா கமகே, அர்ஜுன போன்றவர்கள் கருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இதனால் ஐ.தே.கவுக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை (04) மறுதினம் சிறிகொத்தவில் கூடவுள்ளது.

Related Articles

Latest Articles