ஐ.பி.எல். போட்டித் தொடர் குறித்து வெளியான புதிய தகவல்

ஐ.பி.எல். போட்டி திகதியில் மாற்றம் செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஆனால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை எதுவும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் இந்த போட்டி செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அக்டோபர் 10 ஆம் திகதி வரை நடைபெறலாம் என்று தகவல் வெளியானது.

ஐ.பி.எல். போட்டி அட்டவணை குறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி மற்றும் நிர்வாகிகள் அமீரகம் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் அக்டோபர் 15 ஆம் திகதிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தொடக்கத்தில் 10 நாட்கள் இரண்டு ஆட்டங்களை நடத்துவது குறித்து சிந்திக்கப்பட்டது.

செப்டம்பர் மாதத்தின் 3-வது மற்றும் 4-வது வாரத்தில் 10 நாட்கள் இரண்டு ஆட்டங்கள் நடத்தினால் மாலையில் நடைபெறும் போட்டியில் வெப்பத்தை தாக்குப்பிடித்து வீரர்கள் விளையாடுவது கடினமாக இருக்கும். இதனால் இறுதிப்போட்டியை அக்டோபர் 15 ஆம் தள்ளிப்போட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 10 நாட்கள் இரண்டு ஆட்டங்கள் நடத்துவது என்பது 5 அல்லது 6 நாட்களாக குறையும்’ என்றார்.

Paid Ad
Previous articleஇரத்தினபுரியில் 392 – கண்டியில் 206 பேருக்கும் கொரோனா தொற்று!
Next articleமகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை