கடலில் சுறாவுடன் போராடி மனைவியை மீட்ட கணவன்

தனது மனைவியை சுறாமீன் ஒன்று தாக்கிக் கொண்டிருப்பதை பார்த்த அலைச்சறுக்கு வீரர் ஒருவர் சுறா மீது பாய்ந்து அதை அங்கிருந்து விரட்டும் வரை கைகளால் குத்தி தனது மனைவியை காப்பாற்றியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

35 வயதான சாண்டெல்லே டாய்ல் என்ற பெண், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள ஷெல்லி கடற்கரையில் தனது கணவருடன் அலைச்சறுக்கில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, சுறாமீன் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியது. அதைக் கண்ட அவரது கணவர், அலைச்சறுக்கு பலகையிலிருந்து சுறா மீது தாவி குதித்து அது சாண்டெல்லாவை விடுவிக்கும் வரை தொடர்ந்து கடுமையாக தாக்கிக்கொண்டே இருந்தார்.

சுறாமீன் அங்கிருந்து விலகிச் சென்றதும் தனது மனைவியை கடற்கரைக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வந்துள்ளார்.

சுறா மீன் தாக்கியதில் வலது காலில் கடுமையான காயம் ஏற்பட்ட அவர் உடனடியாக வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், சாண்டெல்லேவை சுமார் 10 அடி நீளம் கொண்ட இளம் வெள்ளை சுறா ஒன்று தாக்கியிருக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கூறுவதாக போர்ட் மேக்வாரி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், அதிவேகமாக செயல்பட்டு தன் மனைவியை காப்பாற்றிய கணவருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரது பெயர் மார்க் ரேப்லே என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இவர் அலைச்சறுக்கு பலகையிலிருந்து சுறா மீது தாவி குதித்து, அதை அடித்தே விரட்டியதுடன் தன் மனைவியை அங்கிருந்து கடற்கரைக்கு திரும்ப அழைத்து வந்துள்ளார். இது உண்மையிலேயே ஒரு வீரதீர செயல்தான்” என்று சர்ப் லைஃப் சேவிங் என்.எஸ்.டபிள்யூ என்ற அலைச்சறுக்கு வீரர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகியான ஸ்டீவன் பியர்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளதாக சிட்னி மார்னிங் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பகுதியில் கடந்த சில மாதங்களில் நடக்கும் மூன்றாவது பயங்கரமான சுறா மீன் தாக்குதல் சம்பவம் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, சுறாவிடமிருந்து தனது கணவரால் காப்பாற்றப்பட்ட சாண்டெல்லே டாய்ல்ஸுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles