ஒரு சமூகம் தன்னைத் தனியானதொரு இனமாக அங்கீகரித்துக்கொள்வதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கி, தனது இருப்பை நிலையாக நிலை நிறுத்திக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் போதும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஆனால் 200 ஆண்டுகள் கடந்தும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் – தனியானதொரு இனமாக அங்கீகரிக்கப்படாமல் அற்ப விடயங்களைக்கூட போராடியே பெற வேண்டிய நிலையில் மலையகத் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
இலங்கை தீவில் சுமார் 15 லட்சத்துக்கு மேற்பட்ட மலையகத் தமிழர்கள் வாழ்ந்தாலும், மலையக பெருந்தோட்ட பகுதிகளை மையப்படுத்தியதாகவே மலையகத் தமிழர்களின் இருப்பு தங்கியுள்ளது. ஆனால் பெருந்தோட்ட மக்களே இன்னமும் நவீன அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்பதே கசப்பான உண்மையாகும்.
தமது பாட்டன், பூட்டன் இரத்தம், வியர்வை சிந்தி உழைத்து, காடாகக் காட்சிதந்த மண்ணை வளமாக்கியதுடன், தமது உடலைக்கூட மணக்குக்கு உரமாக்கியிருந்தால்கூட இன்றைய தலைமைறையும் வீடற்றவர்களாக, முகவரியற்றவர்களாக சொந்த மண்ணிலேயே அகதிகள்போல் வாழ்ந்துவருவது அடக்குமுறையின் உச்சகட்டமாகும்.
மலையக மக்களின் நிலையை காட்சிப்பொருளாகப் பயன்படுத்தி வயிற்று பிழைப்பு நடத்தும் ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள், தமது வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காக மக்கள் திண்டாடும் நிலையிலும், அவ்வப்போது சில விழிப்புணர்வுகளை நடத்திவிட்டு அத்துடன் நின்றுவிடும். அடுத்தக்கட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்பது பெரும்பாலும் இல்லையென்றே கூறவேண்டும்.
மலையக மக்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பைக் கருத்திற்கொண்டு அவர்களைக் கௌரவிப்பதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கி, மலையகம் – 200 எனும் நிகழ்வைக்கூட நடத்தி இருந்தது. அந்த நிகழ்வால் நடந்த மாற்றம்தான் என்ன? குறைந்தபட்சம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைகூட தீர்க்கப்படவில்லை. ஆயிரத்து 700 ரூபா தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கூட இரத்து செய்யப்பட்டுள்ளது.
பெருந்தோட்டப்பகுதிகளில் இருந்து நகர் பகுதிகளுக்கு வெளியேறியவர்கள் இன்று கௌரவமாக வாழ்ந்தாலும் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு காணி உரிமையோ, முகவரியோ இல்லை. எனவே, அம்மக்களை கௌரவிப்பதாக இருந்தால் முதலில் காணி உரிமையை கொடுங்கள். நிரந்தர முகவரியை வழங்குவதற்கு வழிசெய்யுங்கள். லயன் யுகத்துக்கு முடிவு கட்டுங்கள். அதுவே உண்மையான – ஏற்றுக்கொள்ளக்கூடிய கௌரவமாக அமையும். அதைவிடுத்து வருடமொருமான நிகழ்வுகளையும், கொண்டாட்டங்களையும் நடத்துவதால் நடக்கபோவது எதுவும் இல்லை.
மலையகத்தில் சகல வசதிகளுடன்கூடிய கிராமங்களை உருவாக்குவதற்கான முற்கட்ட நகர்வாக, பெருந்தோட்ட நிறுவனங்களின் பிடியில் இருந்து காணிகளை சுதந்திரம் பெற வைப்பதற்காக நவீன மலையக கிராம திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தால் அதனை வரவேற்கலாம். மாறாக பெருந்தோட்ட மக்களை தொடர்ந்து லயன்களுக்குள்ளேயே அது ஒடுக்கும் நடவடிக்கையாக இருந்தால் மற்றுமொரு துரோகமாகவே அமையும்.
அதேபோல பெருந்தோட்டங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கே பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கலாம். அதன்மூலம் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணலாம். இதற்குரிய பொறிமுறை வகுப்பது பற்றி சிந்திக் க வேண்டும்.
தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கில்கூட ஜெனிவாத் தொடர் வரும்போது போராட்டங்கள் நடத்தப்படும். அதன்பின்னர் கோரிக்கைகள் கிடப்பில் போடப்படும். நினைவேந்தல்கள் நடத்தப்படும். அவை அனைத்தும் வெறும் நிகழ்வுகளாகவே நடந்து முடிகின்றன. மலையகம் 200 நிகழ்வுகளும் இப்படிதான் நடந்து முடிந்தன. ஆகவே மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை மக்கள் மற்றும் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.