ஹட்டன் -டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகேவை அவருடைய கண்டியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நேற்று (18.12.2020) சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினேன்.
விசேடமாக ஹட்டன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடி அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றேன். இந்த வைத்தியசாலையை பொறுத்த அளவில் கிளினிக் வருகின்ற நோயார்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக அதிக அளவில் வருகின்ற நோயாளர்களை அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சரியான நடைமுறை இல்லாமை.ஒரு சிலர் கூட்டத்தில் மயக்கம் போட்டு விழுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகம்.
மேலும் இங்கு வெளியேற்றப்படுகின்ற கழிவுகளை முறையான முகாமைத்துவம் இல்லாமல் பாதையில் விடப்படுகின்றமை தொடர்பாகவும் மத்திய மாகாணத்தில் கல்வி ரீதியாக பல அரசியல் தலையீடுகள் தொடர்பிலும் அவருடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இது தொடர்பாக மிக விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன்போது அவர் என்னிடம் தெரிவித்தார். ” – என்றார்.
