நிழல் உலக தாதாவும், போதைப்பொருள் கடத்தல் காரருமான ‘குடு சலிந்து’ 79 சொகுசு வாகனங்களை வைத்துள்ளதாகவும் , அவற்றின் இலக்கத் தகடுகள் மாற்றப்பட்டு போதைப்பொருள் வியாபாரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
26 வயதான குடு சலிந்து, வெவ்வேறு நபர்களின் பெயர்களில் 48 வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வந்துள்ளதாகவும், மேற்படி வங்கிக் கணக்குகள் ஊடாக 2 வருடங்களுக்குள் 1,059 மில்லியன் ரூபா பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களின் பெயர் பட்டியல் புலனாய்வுப் பிரிவினராலும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினராலும் தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டமும் உள்ளது எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
குடு சலிந்து தற்போது சிஐடி தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றது.










