அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரனவுக்கு சுகாதார அமைச்சு பதவியை வழங்குவது தொடர்பில் அரசு பரிசீலித்துவருகின்றதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தற்போது கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சராக செயற்பட்டுவரும் ரமேஷ் பத்திரண, அப்பதவியில் நீடிப்பதற்கு விரும்புவதால் சுகாதார அமைச்சு பதவியை ஏற்பது தொடர்பில் அவர் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை எனவும் தெரியவருகின்றது.
புதிதாக நான்கு அமைச்சர்களை நியமிக்க அரசு முன்னதாக திட்டமிட்டிருந்தது. எனினும், அம்முடிவு தற்போது கைவிடப்பட்டு, அமைச்சு விடயதானங்கள் கைமாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மூன்று அல்லது நான்கு அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த வருடம் தேர்தல் வருடமென்பதால் புதிதாக அமைச்சர்களை நியமித்தால் அது ஜனாதிபதிமீதான நன்மதிப்பை இழக்க செய்யும் என சிரேஷ்ட ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல்லவை நீக்குமாறு சுகாதார தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
