கொட்டில்களில் வாழும் குயின்ஸ்லேண்ட் மக்களுக்கு எப்போது வீடுகள் கிடைக்கும்?

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆர்.பி.கே பிளாண்டேஷனின் பிரவுன் ஷீக் தோட்ட குயின்ஸ்லேண்ட் பிரிவு மக்கள் தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி 20 குடியிருப்புகளை சேர்ந்த லயன் குடியிருப்பு மின்சாரக் கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்து சாம்பலானது.

இதனால் அந்த 20 லயன் வீடுகளில் வாழ்ந்த 83 பேர் நிர்க்கதிக்குள்ளாகினர். அப்போது இவர்களை தோட்ட நிர்வாகம் குயின்ஸ்லேன்ட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைத்தது. சுமார் இரண்டு வாரம் தங்கிய பின்னர் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலையில் இவர்களை சிறு குடிசைகளில் மீண்டும் குடியேறினர்.

அந்த சிறு குடிசையில் சமைத்து உண்ணுவதோடு தாய், தந்தை,பிள்ளைகளுடன் கடந்த ஆறு மாத காலமாக தங்கியிருந்தனர். இந்நிலையில் தற்போது தோட்ட நிர்வாகம் டிரஸ்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட புதிய கூரை தகடுகள் மூங்கில் மரங்கள் என்பவற்றை வழங்கி கூடாரங்கள் அமைத்து கொள்ளுமாறு பணித்துள்ளது.

எது எப்படியாயினும் கடந்த பல தசாப்தங்களாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டியது தோட்ட நிர்வாகத்தினதும் இன்றைய அரசாங்கத்தினதும் பொறுப்பாகும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் வாழ்கின்றனர். பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்கும் அவ்வாறான குடிசைகளில் தங்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி தீ பரவியதை அடுத்து அரசியல்வாதிகள்,தொண்டு நிறுவனங்கள்,தோட்ட நிர்வாகம் என பலரும் ஒரு வார காலம் தொடர்ந்து வந்து உதவி செய்தனர். அதன்பின்னர் எந்த ஒரு நிறுவனமோ அல்லது அரசியல்வாதிகளோ முன் வந்து எங்களை பார்க்கவில்லை என மக்கள் அங்கலாய்கின்றனர். இதுகுறித்து தற்போதைய அரசு முன்வந்து வீடமைப்பு திட்டத்தை உருவாக்கி பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கும் தனித்தனி வீடுகள் கட்டி கொடுக்குமாறு பெருந்தோட்ட அமைச்சிடம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles