கொரோனாவிலிருந்து நாடு மீள வரதராஜப் பெருமாளை வழிபட்ட ஞானசார தேரர்

இன, மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் சிறப்பு பூசை வழிபாட்டினை மேற்கொண்டதாக கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில், நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் ஒரு விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் உள்ள சிறப்பான விஷ்ணு ஆலயத்தினை தெரிவுசெய்து நயினாதீவு விகாராதிபதி மற்றும் யாழ்ப்பாண நாகவிகாரை விகாராதிபதியுடன் இணைந்து வந்திருக்கின்றேன்.

நாங்கள் ஒரு எதிர்பார்ப்போடு இங்கு வந்திருக்கின்றோம் . தற்போதைய நிலைமை அனைவருக்கும் தெரிந்த விடயம்,  இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சிலர் நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள். அது சிங்களவராக இருக்கட்டும், தமிழராய் இருக்கட்டும், எந்த இனத்தவராயினும் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சிலர் ஒரு நேர உணவுக்கு கூட வழியில்லாமல் உள்ளார்கள் அதேபோல் சிலருக்கு வேலை இல்லாத பிரச்சனை காணப்படுகின்றது. அத்தோடு இந்த நோய் தொற்றுக்கு உள்ளானோர் சிகிச்சை பெறுவதற்கு அவதிப்படுகிறார்கள். எந்த இனத்தவராக இருந்தாலும் பிரச்சனையில்லை அனைத்து இன மக்களும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

கடவுள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக குறிப்பாக பௌத்த மதத்தில் நாம் பின்பற்றும் ஒரு விதிமுறையை போல இந்து மதத்தில் உள்ள ஆகம விதி முறையை இணைத்து இந்த தொற்றில் இருந்து நாடு விடுபட கடவுளிடம் வேண்டி ஒரு விசேட பிரார்த்தனை மேற்கொண்டுள்ளோம்.

தற்பொழுது பௌத்த இந்து இஸ்லாம் என்ற பேதத்தை மறந்து அனைவரும் இணைந்து இந்த கொரோனா நோயிலிருந்து விடுபடுவதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

இலங்கையில் நான்கு பிரதான விஷ்ணு ஆலயங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று தான் இங்கு யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜ பெருமாள் விஷ்ணு ஆலயத்தில் இந்த விசேட பூஜை வழிபாட்டை மேற்கொண்டு ள்ளோம். கடவுளிடம் மன்றாடி இந்த விஷேட பூசை வழிபாடு மேற்கொண்டுள்ளோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles