‘கொரோனா தாக்கம்’ – பாடசாலைகளில் நவராத்திரி விழா நடத்த வேண்டாம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள சகல தமிழ்மொழிமூலமான பாடசாலைகளிலும் நவராத்திரி விழா பூஜைகளையோ அல்லது விழாக்களையோ, அது தொடர்பான  ஒன்றுகூடல்களையோ நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்விச் செயலாளரின் பணிப்புரையில் மத்திய மாகாண மேலதிக மாகாணக் கல்வி பணிப்பாளர் திருமதி. சத்தியேந்திராவால், சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அதிபர்களுக்கு கடிதம்மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாடசாலை அதிபர்களும், பாடசாலை நிர்வாகங்களும் செயற்படவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

வருடாந்தம் நாடு முழுவதுமுள்ள தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழா அனுஷ்டிக்கப்படுவது வழமையான நடைமுறை. எனினும், கொரோனா வைரஸ் அச்சத்தால் நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles