“கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக இலங்கை புலனாய்வு பிரிவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியது எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்வதற்கு அரசாங்கம் தயாராகின்றது.”
இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பிரதான சூத்திரதாரியொருவர் இருக்கின்றார், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
தாக்குதலுக்கு உண்மையாகவே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இந்த அரசாங்கத்துக்குள் இருப்பதால், பிரதான சூத்திரதாரியென ஒருவரை முன்னிலைப்படுத்தி, உண்மையாகவே பொறுப்புக்கூறவேண்டியவர்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
இதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்கும் சம்பவம் தொடர்பில் புதிய கதை, திரைக்கதை, வசனம் எழுதப்பட்டுவருகின்றது.
இலங்கை புலனாய்வுப்பிரிவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது என சனல் 4 ஊடகம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என இமாம் விசாரணைக்குழு அறிக்கையில் தர்க்க ரீதியாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர், ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆகியோர் இமாம் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
நிலைமை இவ்வாறிருக்க புலனாய்வு பிரிவே இத்தாக்குதலை நடத்தியது எனவும், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என சுட்டிக்காட்டி, அப்போது இராணுவ புலனாய்வுப் பிரிவு பிரதானியாக செயல்பட்ட மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கைது செய்யும் திட்டம் அரசாங்கத்துக்கு உள்ளது.
இதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புலனாய்வு பிரிவே நடத்தியது என்ற தகவலை சமூகமயப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகின்றது.
புலனாய்வு பிரிவே தாக்குதலை நடத்தியது என்ற போலியான, கற்பனைக்கதையை அசாத் மௌலானா என்பவரே சனல் 4 ஊடகம் ஊடாக உலகுக்கு சொன்னார். அவர் தற்போது அரசியல் தஞ்சம்கோரி சுவிஸ் சென்றுள்ளார்.
அசாத் மௌலான என்பவர் இரு திருமணங்களை முடித்தவர். இரண்டாவது திருமணத்தை போலி ஆவணங்களை சமர்ப்பித்து, பெயரை மாற்றிக்கொண்டே செய்துள்ளார். இது தொடர்பில் அவரது இரண்டாவது மனைவியால், சாய்ந்தமருது பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் கல்முனை நீதிமன்றத்தில் பி அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பயணத்தடை பெறுவதற்கு முன்னரே நாட்டைவிட்டு அசாத் மௌலானா ஓடிவிட்டார்.
சுரேஸ் சலேவை கைது செய்ய வேண்டுமானால் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பெற வேண்டும். எனினும், அவரால் வரமுடியாத சூழ்நிலை. அவ்வாறு வந்தாலும் வெளிநாட்டு பயணத்தடை இருப்பதால் விமான நிலையத்தில் அவரை கைது செய்து, கல்முனை நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அரசாங்கத்தின் நாடகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ‘இந்த வெளிநாட்டு பயணத்தடை” விவகாரம் தடையாக உள்ளது. எனவே, பயணத்தடையை நீக்குவதற்கு அசாத் மௌலானாவின் சட்டத்தரணியொருவர் மனு சமர்ப்பிப்பார், அதற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்ககூடாது என மேல் மட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஜனவரி 21 ஆம் திகதி மனு முன்வைக்கப்பட்டு, அசாத் மௌலானாவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. பொலிஸார் எதிர்ப்பை வெளியிடாததால், பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், அசாத் மௌலானாவுக்கு எதிராக முறைப்பாடு செய்த அவரது இரண்டாவது மனைவிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவுமீது அசாத்மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டை இமாம் குழு, நிராகரித்தள்ள நிலையில், பொய்க்கு உயிர்கொடுப்பதற்கு அரசாங்கம் ஏன் முயற்சிக்கின்றது?” – என்றார் உதய கம்மன்பில.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் மற்றும் பொலிஸ் பேச்சாளர் ஆகியோரிடம் கம்மன்பில, எட்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்.