கோழிகளை நரியிடம் ஒப்படைப்பதா? கப்ராலின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு!

சுயாதீன நிறுவனமாக இயங்கவேண்டிய மத்திய வங்கியையும் இந்த அரசு அரசியல் மயப்படுத்திவிட்டது. எனவே, மத்திய வங்கி அறிக்கைமீது இனிமேல் நம்பகத்தன்மையற்ற நிலைமையே ஏற்படும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மத்திய வங்கியென்பது சுயாதீனமாக இயங்கவேண்டிய மிக முக்கிய நிறுவனமாகும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எனவேதான் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு சுயாதீனமாக இயங்கக்கூடிய துறைசார் நிபுணர்கள் நியமிக்கப்படுகின்றனர். அப்போதுதான் மத்திய வங்கியால் வழங்கப்படும் தகவல்கள்மீது நம்பிக்கை ஏற்படும்.

ஆனால் இன்று என்ன நடக்கின்றது? கட்சி அரசியலை முன்னெடுத்தவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார். இதனால் இனிவரும் காலங்களில் மத்திய வங்கி அறிக்கைகூட, அரசியல் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமாக மாறக்கூடும். தகவல்களில் நம்பகத்தன்மை இருக்காது. இதனால் நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து அடையும் அபாயம் உள்ளது.

மத்திய வங்கிக்கு அரசியல் நியமனம் வேண்டாம் எனக்கூறவில்லை. ஆனால் திறமையான பலர் உள்ளனர். இந்நிலையில் ஆளுநர் ஒருவரை நியமிப்பதற்கான நெறிமுறைகளைமீறி கப்ரால் நியமிக்கப்படுவது ஏன்? ” – என்றார். அதேவேளை, மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையானது, கோழிகளை நரியிடம் ஒப்படைத்த செயலுக்கு நிகரானதாகும் என்று ஜே.வி.பி. உறுப்பினர் சுனில் ஹத்துனெத்தில் குறிப்பிட்டார்.

Paid Ad
Previous articleஇலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடை நிறுவனங்களில் நம்பிக்கையை வலுப்படுத்துவது எல்லா வகையிலும் சிறந்த விடயம்
Next articleலங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தில் கைக்குண்டு மீட்பு! பொலிசார் சுற்றிவளைத்து சோதனை!!