வடக்க, கிழக்கு தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்களையும் அரவணைத்து பயணிக்கக்கூடிய தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஆளும் அதிகாரத்தை வழங்குவதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டனர் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டை மீடபதற்கான உரிய பொருளாதார வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது. உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார நிபுணர்களான ஹர்ஷ டி சில்வா, எராக் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் உள்ளிட்ட குழுவினரால் அத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எமது ஆட்சியில் ஹர்ஷ டி சில்வாவே நிதி அமைச்சர். எனினும், ஜே.வி.பி. உள்ளிட்ட தரப்புகள் இன்னும் வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்த பங்காளிக்கட்சிகள் உள்ளன, தற்போது புதிதாக கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துவருகின்றனர். நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருந்தும் அரசியல்வாதிகள் வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் தலைவர் சஜித், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் என்ற விடயத்தை அவர்கள் ஏற்றுள்ளனர். எனவே, வேட்பாளர் விடயத்தில் மாற்றம் வராது. எவ்வளவு பெரிய கூட்டணி அமைந்தாலும் சஜித்தான் வேட்பாளர்.
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களை பாதுகாக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துவருகின்றார். அவருடன் நாம் ஒருபோதும் இணையப்போவதில்லை.” – என்றார் அஜித் பி .பெரோ.










