சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான ‘திவயின’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியரும் ஆசிரியர் பீடப் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்கவை கௌரவிக்கும் நிகழ்வில் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஏழு தசாப்த கால ஊடகப் பணியில் ஈடுபட்ட எட்மண்ட் ரணசிங்கவின் ஊடகத் துறை இலங்கையின் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஊடகக் கலையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராய்வதன் மூலம் பயனுள்ள ஊடகக் கலையை உருவாக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
1977 ஆம் ஆண்டு நான் முதன்முதலில் பியகம தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட போது அதற்கு தேவையான கட்டுரையொன்றைத் தயார் செய்ய நல்ல ஊடகவியலாளர் ஒருவரைப் பற்றி வினவிய போது திடீரென்று எட்மண்ட் ரணசிங்கவைப் பற்றி எனது தந்தை சொன்னார். எனது அரசியலில் எனக்கு முதல் கட்டுரையை எழுதித் தந்தார். கடந்த ஆண்டு வரை அது என்னிடம் இருந்தது. ஆனால் இப்போது என்னிடம் அது இல்லை.
எனது தந்தை லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் எட்மண்ட் ரணசிங்க சிலுமின, தினமின போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக பாரிய சேவையாற்றினார்.
பியசேன நிஷங்க,எம்.ஏ.சில்வா, மார்ட்டின் விக்கிரமசிங்க போன்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து அவர் பயிற்சி பெற்றுக்கொண்டார். எனவே, சுதந்திரத்திற்கு முன்னர் இருந்த ஊடகக் கலை, அதற்குப் பின் தோன்றிய ஊடகக் கலை இரண்டிலும் ரணசிங்க நல்ல அனுபவத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
1953 ஆம் ஆண்டு அரிசியின் விலை அதிகரித்த போது டட்லி சேனாநாயக்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.அதற்கு 69 ஆண்டுகளுக்குப் பின்னர், கோட்டாபய ராஜபக்சவால் எண்ணெய் தட்டுப்பாட்டினால் பதவி விலக நேரிட்டது. இந்த 69 வருடங்களில் ரணசிங்கவுக்கு நிறைய அனுபவம் கிடைத்திருக்கும். அவற்றைப் பற்றி புத்தகம் எழுதும் திறமை அவருக்கு இருக்கிறது.
1964 ஆம் ஆண்டு பத்திரிகைத் துறைப் போராட்டத்தை ரணசிங்க நடைமுறையில் முன்னெடுத்தார். அவரின் அனுபவம் இந்நாட்டின் ஊடக கலாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூற வேண்டும். ஆனால் தற்போது அச்சு ஊடகத்துறை ஓரளவு பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.
அன்று எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட பத்திரிகை கலை இன்று i pad வரையில் வளர்ந்துள்ளது. லேக்ஹவுஸ் போன்ற பெரும் மாளிகைக்குள் அடங்கி கிடந்த அறிவை google ஊடாக இலகுவாக தேடிக்கொள்ளும் வாய்ப்பு தற்போது உள்ளது. அதனால் பத்திரிகை துறையை சமூகமயப்படுத்துவதற்கு தொழில்நுட்பம் சிறந்த களமாகவும் அமைந்துள்ளது.
இருப்பினும் எந்தவொரு நாட்டிலும் உள்ள ஊடகங்கள் அந்நாடுகளின் சட்டங்களுக்கு இணங்கிச் செயற்படுகின்றன. ஆனால் சமூக ஊடகங்களின் வரவை தொடர்ந்து அவரவரின் தேவைக்கேற்ற பதிவுகள் இடப்படுகின்றன. அதனால் அனைத்து சமூக ஊடகங்களும் சர்வதேச சட்டத்துக்கு இணங்க வேண்டுமா அல்லது நாட்டின் உள்ளக சட்டதிட்டங்களுக்கு இணங்க வேண்டுமா என்ற கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும்.
ஐரோப்பாவில் உள்ள சட்டத்திற்கு அனைவரும் உடன்படுவதற்கான சாத்தியம் உள்ளது. தற்போது உலகிலுள்ள பத்திரிகை மற்றும் சுஞ்சிகை உரிமையாளர்கள் விற்பனை அல்லது முதலீட்டாளர்களிடத்தில் மீளக் கையளிக்கும் செயற்பாடுகளுக்கு தயாராக உள்ளனர். அதனால் ஊடகத்துறையின் எதிர்கால நடைமுறையை அடுத்த இரண்டு, மூன்றுவருடங்களுக்குள் அவதானிக்க முடியும். அந்த துறைசார் நிபுணர்கள் நியூயோர்க்கில் மாத்திரமின்றி இலங்கையிலும் உருவாகலாம்.” – என்றார்.
