“ கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையை மூடிமறைப்பதாலேயே சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி சர்வக்கட்சி பொறிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயங்குகின்றார்.” – என்று ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், வைத்தியருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியவை வருமாறு,
“ கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமையை சமாளித்து நாட்டையும், மக்களையும் மீட்பதற்கு அனைவரும் இணைந்து பணியாற்றுவோம், அதற்காக சர்வக்கட்சி பொறிமுறையை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவ்வாறானதொரு கூட்டத்தை ஜனாதிபதி நடத்த மாட்டார். சர்வக்கட்சி பொறிமுறையையும் அவர் உருவாக்கமாட்டார். ஏனெனில் அதற்கான காரணத்தையும் ஆளுங்கட்சி எம்.பியொருவரே அண்மையில் பகிரங்கப்படுத்தினார்.
இராணுவ அதிகாரி ஒருவரும், இரு வைத்திய வைத்திய நிபுணர்களும் கொரோனா தரவுகளை மாற்றியமைக்கின்றனர் என்ற விடயத்தை குறிப்பிட்டிருந்தார். எனவே, சர்வக்கட்சி பொறிமுறையொன்று உருவாக்கப்படுமானால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கை தொடர்பில் உண்மையான தகவல்கள் வெளியிடவேண்டும். கொவிட் நிதியத்துக்கு கிடைத்த பணம் மற்றும் தடுப்பூசிக்காக எவ்வளவு செலவிடப்படுகின்றது என்பதை குறிப்பிட வேண்டும்.
ஆட்சியாளர்கள் தரவுகள் – தகவல்களுடன் விளையாடுகின்றனர். எனவே, சர்வக்கட்சி பொறிமுறையை ஜனாதிபதி வகுக்கப்பட்டார். சிலவேளை, ஊடக பிரச்சாரத்துக்காக சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை வேண்டுமானால் நடத்தலாம்.
தகவல்கள் மறைக்கப்படவில்லை, மாற்றப்படவில்லை எனில் ஆளுங்கட்சி எம்.பியின் கூற்றை அரசு மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு மறுக்கவில்லை. உண்மையை கண்டறிவதற்கான விசாரணையும் மேற்கொள்ளவில்லை. 200 மரணங்கள், 4 ஆயிரம்வரை தொற்றாளர்கள் என்றே கூறப்படுகின்றது. இது பொய்.
இன்று தனியார் வைத்தியசாலைகளில் என்டிஜன்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. வீடுகளில் உள்ளவர்களுக்கும் செய்யப்படுவதில்லை. ஏனெனில் தொற்று உறுதியானால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க இடமில்லை. 20 ஆயிரம்வரை கொரோனா பரிசோதனை செய்தவிட்டு அதிலும் சரியான தகவலை வெளியிடாமல் உள்ளனர். தொற்று நோயுடன் அரசியல் விளையாட்டு விளையாடக்கூடாது. ஏனெில் சரியான தகவல்கள், தரவுகள் இருந்தால் மட்டுமே உரிய தீர்மானங்களை எடுக்க முடியும்.” என்றார்.










