கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் தேவையில்லை. சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றிக்கொள்ளமுடியும் – என்று சட்டத்துறை பேராசிரியரும், அமைச்சருமான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு கட்டாயம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தவறான முறையில் கருத்துகள் பரப்பட்டுவருகின்றன .
சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக உயர்நீதிமன்றத்துக்கு அரசு பல திருத்தங்களை சமர்ப்பித்திருந்தது. அவற்றை உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது. வழக்கு தீர்ப்பை நன்கு வாசித்தால் இது தெரியும். அரசால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை குழுநிலை விவாதத்தின்போது உள்வாங்கினால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என தெளிவாக நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அனைத்து திருத்தங்களையும் நாம் ஏற்போம். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மையோ, சர்வஜன வாக்கெடுப்போ தேவையில்லை.” – என்றார்.










